Last Updated : 22 Aug, 2021 03:14 AM

 

Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM

செப்.1 முதல் கல்வி நிலையங்களை சுழற்சி முறையில் திறக்க முதல்வர் உத்தரவு- பள்ளி, கல்லூரிகளை திறப்பது காலத்தின் கட்டாயம்: கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள் கருத்து

கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரோனா பரவலால் 2020 மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அரசின் தீவிரத் தடுப்பு நடவடிக்கையால் தொற்று குறைந்து வணிக நிறுவனங்களைத் திறக்க தளர்வு அளிக்கப்பட்டாலும், கல்வி நிறுவனங்களை திறப்பதில் நிலவிய அரசின் தயக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கரோனா 2-வது அலையால் 10-வது, பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரிகளிலும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

ஆன்லைன் வகுப்பு, தேர்வு முறையால் நகர்ப்புற மாணவர்களை விட கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக கிராமப்புற பள்ளி, கல் லூரி மாணவர்கள் மொபைல் போன், மடிக்கணினி, இணைய வசதியைப் பெற முடியாமல் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவர்கள் நேரடியாக வகுப்பறைக்குச் சென்று ஆசிரியர்கள், சக மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்பதைப் போல, ஆன்லைன் கல்வி இருக்காது என்பதே பெரும்பாலான கல்வி யாளர்களின் கருத்தாக உள்ளது. ஆன்லைன் வசதி கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக் காததால் அவர்களிடம் அக்கறையற்ற போக்கு நிலவுகிறது. பெற்றோரும் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

வீட்டில் சும்மாதானே இருக்கின்றனர் என தங்கள் குழந்தைகளை கூலி வேலைக்கு அனுப்பும் சூழலும் அதிகரித்து வருகிறது.

சிவகாசி உள்ளிட்ட ஊர்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பேர் வேலைக்குச் செல்கின்றனர். படிக்க வேண்டிய மாணவப் பருவத்தில் கையில் பணம் புரளும்போது அவர்கள், மது உள்ளிட்ட தவறான பழக்கத்துக்கு ஆட் படலாம். இதனால் அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து விடும் நிலை ஏற்பட்டு இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் செப்.1 முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளையும், கல்லூரிகளையும் சுழற்சி முறையில் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து சிவகாசி முஸ்லிம் பள்ளிகளின் தாளாளர் முகைதீன் அப் துல் காதர் கூறியதாவது:

தொடர்ந்து பள்ளிகள் திறப்பு தள்ளிப் போனால் இடைநிற்றல் குழந்தைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சிவகாசி போன்ற ஊர்களில் பட்டாசு உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடுகின்றனர். வேலை இழப்பால் வருமானமின்றி தவிக்கும் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப முயல்கின்றனர். கல்லூரிகளில் படித்து வந்த மாணவர்கள் பலர் திருப்பூரில் வேலைக்குச் சென்று விட்டனர்.

பள்ளி, கல்லூரிகளை திறப்பது காலத் தின் கட்டாயம் மட்டுமல்ல. நாட்டின் எதிர் காலத்துக்கும் அவசியமானது. இதே நிலை நீடித்தால் 2020-21-ம் கல்வியாண்டு ஆல் பாஸ் மாணவர்களையே தனியார் நிறுவனங்கள் ஒதுக்கும் நிலை ஏற்படலாம்.

மாணவர்களுக்கு தொற்று பாதிக்கும் என்றாலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை காலையிலும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பிற்பகலிலும் சுழற்சி முறையை பின்பற்றி பள்ளிகளை திறக்கலாம் என்றார்.

அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில், கல்லூரி மாணவர்களை பொறுத்தவரை தினமும் கல்லூரிக்கு நேரில் வர வேண்டும்.

சிவகாசி போன்ற ஊர்களில் சுழற்சி வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேரமாக பணிக்குச் செல்கின்றனர்.

முழு நேரமாக வேலைக்குப் போய் பழக்கப்பட்டால், பெற்றோரும் மீண்டும் கல்லூரிக்கு அனுப்புவது குறைந்து விடும்.

முன்பெல்லாம் பிளேக், அம்மை போன்ற நோய் பரவலின்போது கல்வி நிறுவனங்களில் தடுப்பூசி போட்டு தற்காத்துக் கொண்டோம். அதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கல்லூரிகளை திறக்க வேண்டும். மாணவப் பருவம் அலைபாயும் பருவம். ஆன்லைன் வகுப்பு என்பது சிலந்தி வலை போன்றது.

தற்போது மாணவர்கள் கட்டுப்பாடின்றி நேரத்தைப் போக்குவதால் சுயதெளிவு இன்றி தவறான பாதைக்கு தள்ளப்படுகின்றனர்.

கிராமப்புற மாணவர்களின் நலன்கருதி கல்லூரிகளை திறப்பது காலத்தின் அவ சியம். இவ்வாறு அவர் கூறினார்.

சிவகங்கை தனியார் பள்ளி நிர்வாகி பால.கார்த்திகேயன் கூறுகையில், ‘‘தொற்றுக் காலம் பல்வேறு அனு பவங்களை கற்பித்து விட் டது. மாணவர்களின் மனம், உடல்நிலை, கற் றல் மனப்போக்கு, தேர்வுகள் பற்றிய ஆர் வம் குறைந்துவிட்டது.

தகுதி அடிப்படையில் கிடைக்க வேண்டிய உயர்கல்வி, எதிர்கால வேலை வாய்ப்பில் சிக்கல், ஒன்றரை ஆண்டாக கற்றல், கற்பித்தலில் பங்கேற்காத மாணவர் களின் தற்போதைய அறிவாற்றல் குறித்த மதிப்பீடுகளை ஆராய்ந் தோமேயானால் கவலை அளிக்கும் தரவுகள்தான் கிடைக்கும்.

போட்டித்தேர்வுகள், கல்விக் கட்டணச் சலு கைகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வுகளில் மாணவர்களின் வெற்றி விகிதம் பாதிக்கப்படும் என்றார்.

கடுமை காட்டக்கூடாது

மனநல ஆலோசகர் மற்றும் உளவியாளர் ராஜூ கூறுகையில், ஆன்லைன் வகுப்புகளை 10 சதவீதம் பேர் தான் முறையாக பயன்படுத்துகின்றனர். 15 வயதை கடந்தவர்கள் அதிகம் ஆன்லைன் கேம் விளையாடுகின்றனர்.

இனிமேலும் பள்ளி, கல்லூரி திறப்பு தள்ளி போனால் எழுத்துகளை மறந்து, கற்பனை, கேட்கும் திறன் இழப்பு அதிகரிக்கும். 15 வயதுக்கு மேல் உள்ளவர்களை பெற்றோரால் கண்டிக்க முடியவில்லை. செல்போன்களுக்கு அடிமையானால் மனநலம் மற்றும் கண், நரம்பு, மூளை பாதிக்கும். பள்ளிகளை திறந்தாலும் மாணவர்களிடம் கடுமை காட்டக் கூடாது.

மென்மையான அணுகுமுறையை கையாண்டு மாணவர்களை படிப்படியாக பக்குவப்படுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x