

கரோனா பரவல் காரணமாக கடந்தஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் ஆரம்பகல்வி எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள், படித்த பட்டதாரிகளைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
மூப்பன்பட்டியைச் சேர்ந்த சி.ரமேஷ்மூர்த்தி, தனியார் பள்ளி ஆசிரியை ஆர்.தெய்வநாயகி தலைமையில் பட்டதாரிகள் பி.சதீஷ்குமார், பி.சுரேஷ்குமார், பி.சுப்புத்தாய், ராஜலட்சுமி, செண்பகவல்லி, பிரியா உள்ளிட்டோர் கொண்ட குழுஉருவாக்கப்பட்டது.
அவர்கள், தற்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம்வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை எடுத்து வருகின்றனர். இதற்காக கிராமத்தில் வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். மாணவ,மாணவிகளை சமூக இடைவெளியுடன் அமர வைத்து, முகக்கவசம் அணிவித்து பாடங்களை கற்றுத்தருகின்றனர்.
ஊருக்குள் உள்ளகாளியம்மன் கோயிலுக்கு முன்புறம் உள்ள திடலில் மாணவர்களை அமர வைத்தும் பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது.
இதுகுறித்து ஆசிரியை ஆர்.தெய்வநாயகி கூறும்போது, “மாணவர்களின் எதிர்காலத்துக்கு அடிப்படை கல்வி மிகவும் முக்கியம். எங்கள் கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து, 1-ம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரையிலானபாடங்களை கற்றுக்கொடுக்கின்றனர். சிறு குழந்தைகளுக்கு பாடங்களை கற்றுத்தரும் முறைகள் குறித்து இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். அதனை பின்பற்றி பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
எஸ்.பொன்மாடன் என்பவர் கூறும்போது, “அடிப்படை கல்விதான் மாணவர்களுக்கான ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும். அந்த கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டதால் தான் இந்த ஏற்பாடு,” என்றார்.
ரமேஷ்மூர்த்தி என்பவர் கூறும்போது, “1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50 பேர் இங்கு படிக்கின்றனர். கடந்த 2 மாதங்களாக பாடங்களை எடுத்து வருகிறோம். மாணவர்கள் உற்சாகத்துடன் வந்து பாடங்களை கற்றுச் செல்கின்றனர்.
காலையில் 10 மணி முதல் 12 மணி வரையிலும்,இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என, இரு வேளைகளில் பாடங்கள் கற்றுத்தரப்படுகிறது. மாணவர்களின் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நல்ல மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை மேலும் வளரும் என நம்புகிறோம்” என்றார் அவர்.