

மதுரை ஊரகப் பகுதிகள், மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 23-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காலை 11 மணி முதல் 4 மணி வரை முன்பதிவின்றி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
''மதுரை மாநகராட்சிக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் தற்போது அதிக அளவில் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தட்டுப்பாடின்றி அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் 12 இடங்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முகாம்களில் 23-ம் தேதி முதல் காலை 11 மணி முதல் 4 மணி வரை முன்பதிவு ஏதுமின்றி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். www.madurai corporation.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் காலை 9 மணி முதல் 11 மணி வரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு இளங்கோ பள்ளி மையத்தில் மட்டும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும். ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருந்த முகாம்கள் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும். 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளி திறக்கப்பட உள்ளதால் புதன்கிழமை முதல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் முகாம்கள் நடைபெறும்.
9-வது வார்டில் பெரிய கோனார் தெருவில் உள்ள திருவிக ஆரம்பப் பள்ளி, 23-வது வார்டு பழைய விளாங்குடி காமாட்சி நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, 7-வது வார்டு தியாகி பாலு மூன்றாவது தெருவில் உள்ள மனோகரா ஆரம்பப் பள்ளி, 33-வது வார்டில் உள்ள சாந்தமங்கலம் அண்ணாநகர் மெயின் ரோடு மாநகராட்சி பள்ளி, 46-வது வார்டு சிங்காரவேலர் தெரு ஜான்போஸ்கோ பள்ளி, 25-வது வார்டு கண்ணனேந்தல் ஜி.ஆர்.நகர் அரசு நடுநிலைப் பள்ளி, 50-வது வார்டு ஏவி மேம்பாலம் அருகில் உமறுப்புலவர் பள்ளி, 70-வது வார்டு சிஎம்ஆர் ரோடு கார்ப்பரேஷன் காலனி பழனியப்பா பள்ளி, 65-வது வார்டு தெற்கு வாசல் நாடார் வித்தியாசாலை சந்து நாடார் நடுநிலைப் பள்ளி, 78-வது வார்டு தெற்கு வெளி வீதி திடீர் நகர் ஈவேரா நடுநிலைப் பள்ளி, 75-வது வார்டு பழங்காநத்தம் மாநகராட்சி பள்ளி, 99-வது வார்டு திருப்பரங்குன்றம் மெயின்ரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் தடுப்பூசி போடப்படுகிறது.
கர்ப்பிணிகள் மற்றும் அவர் தம் கணவர், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் அவர் தம் கணவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு எவ்வித முன்பதிவும் இன்றி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படும். இது தவிர மக்கள் நல அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், தொழில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கள் வளாகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்த விரும்பினால் மாநகராட்சி தகவல் மையத்தை 94437 52211 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்''.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.