Published : 21 Aug 2021 08:25 PM
Last Updated : 21 Aug 2021 08:25 PM

ஆந்திரா, கர்நாடகாவுக்கு பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி: கேரளாவுக்கு இல்லை

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பொது பேருந்துப் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில்‌ நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன்‌ முடிவடையும்‌ நிலையில்‌, மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று (21.08.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌ முதல்வர்‌ தலைமையில்‌ ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் செயல்பட செப்டம்பர் 1 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோலத் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்கவும் கடற்கரைகளில் பொதுமக்கள் கூடவும் பூங்காக்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஐடி நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயங்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 21) வெளியிட்ட அறிவிப்பு:

’’ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பொது பேருந்துப் போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.

பொது

* செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதைத் தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் பின்வரும் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

* கடைகளின் நுழைவு வாயிலில், கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, தானியங்கி உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்துக் கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது.

* கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

* மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக/ இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்றுப் பரவலை, வீடு வீடாகக் கண்காணிக்கக் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும்’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x