

கரோனா பரவல் அச்சத்தால், கோவையில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
கேரள மாநில மக்களால் கொண்டாடப்படும் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று ஓணம். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை, ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல், கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள மலையாள மொழி பேசும் மக்களும், இங்கு ஓணம் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக, ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தடைப்பட்டது.
நடப்பாண்டு ஓணம் பண்டிகை இன்று (ஆக. 21) கொண்டாடப்பட்டது. கரோனா அச்சத்தால், கோவையில் எந்தவித ஆரவாரங்களும் இல்லாமல், எளிமையான முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அத்தப்பூ கோலம்
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஓணம் பண்டிகைக்காக இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி, சித்தாப்புதூர் ஐயப்பன் கோயில் வளாகத்தில் 45 கிலோ எடை கொண்ட செவ்வந்தி, கோழிக்கொண்டை, சம்பங்கி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களைக் கொண்டு, பெரிய அத்தப்பூ பூக்கோலம் போடப்பட்டு இருந்தது.
35 கிலோ பூக்களைக் கொண்டு பிரகாரங்களின் முன்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. மேலும், இன்று காலை 5 மணிக்கு இக்கோயிலின் நடை திறக்கப்பட்டது. கோயிலில் உள்ள ஐயப்பன், விநாயகர், நாகர் உள்ளிட்ட சுவாமிகளுக்குப் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, மலையாள மொழி பேசும் மக்கள் ஏராளமானோர், சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலுக்கு இன்று வந்தனர்.
கரோனா பரவல் அச்சத்தால், நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, வார இறுதி நாட்களில் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், இன்று பக்தர்கள் கோயில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து திரும்பினர்.
அப்போது முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. அதேபோல், ஓணம் பண்டிகையையொட்டி, கோவை காந்திபுரம் டாடாபாத்தில் உள்ள கோவை மலையாளி சமாஜத்தில் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது.
ஆனால், வழக்கமாக நடத்தப்படும் கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இன்று ரத்து செய்யப்பட்டிருந்தன. கோவையின் பல்வேறு இடங்களில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட கேரள மக்கள், தங்களது வீடுகளில் முன்பு பூக்கோலம் போட்டும், இனிப்புகளைச் செய்தும், வீடுகளில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்தும், இன்று ஓணம் பண்டிகையைச் சிறப்பாக, எளிமையான முறையில் கொண்டாடினர்.