ராமேஸ்வரம் அருகே அனுமதியின்றி 140 பனை மரங்களை வெட்டிய இருவர் கைது

பனைமரங்கள்  வெட்டப்பட்ட இடம்.
பனைமரங்கள் வெட்டப்பட்ட இடம்.
Updated on
1 min read

ராமேஸ்வரம் அருகே அனுமதியின்றித் திருட்டுத்தனமாக 140 பனை மரங்களை வெட்டிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

பனை மரத்தை வேரோடு வெட்டி விற்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று, தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில் ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே அனுமதியின்றித் திருட்டுத்தனமாக 140 பனை மரங்களை வெட்டிய இரண்டு பேரைக் காவல்துறையினர் இன்று (ஆக.21) கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரம் அருகே கடுக்காய் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர். சாத்தக்கோன் வலசை அய்யனார் கோயில் அருகே இவருக்கும், இவரது உறவினர்களுக்கும் சொந்தமான 14 ஏக்கர் பனந்தோப்பு உள்ளது. இந்தப் பனந்தோப்பில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்தன. ரவிசங்கர் அடிக்கடி தனது தோப்புக்குச் சென்று வருவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், நேற்று (ஆக. 20) வெள்ளிக்கிழமை ரவிசங்கர் தனது தோப்புக்குச் சென்று பார்த்தபோது அங்கிருந்த 140 பனை மரங்கள் வெட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரவிசங்கர், உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் விசாரணையில், நாகாட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (53), தேவிபட்டினம் அப்புசாமி (50), உச்சிப்புளி காத்தமுத்து (30) ஆகியோர், பனை மரங்களை வெட்டியதாகத் தெரியவந்தது. இதனையடுத்து, இன்று ராஜேந்திரன், அப்புசாமி ஆகியோரைக் கைது செய்த போலீஸார் காத்தமுத்துவைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in