

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 852 கோடி செலவில் 13 லட்சத்து 74 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான இடைக் கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மே மாதம் முதல் 6 ஆயிரத்து 90 மருத்துவர்கள் உட்பட 14 ஆயிரத்து 707 பணியாளர்கள் மருத்துவத்துறையில் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.34 ஆயிரத்து 42 கோடியே 90 லட்சத்தை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2016-17-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.9 ஆயிரத்து 350 கோடியே 66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 852 கோடி செலவில் 13 லட்சத்து 74 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர்.
இந்த திட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் மிகச்சிறந்த செயல்பாட்டின் காரணமாக ரூ.1,032 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் மருத்துவமனைகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக ரூ.928 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்துக்காக ரூ.668 கோடியும், தேசிய சுகாதார இயக்கத்துக்காக ரூ.1,368 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங் கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மற்றும் கரூரில் மேலும் 2 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் ரூ.100 கோடி செலவில் விபத்து சிகிச்சை மையத்தோடு கூடிய உயர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் ரூ.59 கோடி செலவில் 4 மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையிலும் மகப்பேறு சிகிச்சை பிரிவுகள் ரூ.160 கோடி செலவில் உயர்சிறப்பு மையங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.