

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உச்சத்துக்குச் சென்று, பின் படிப்படியாகக் குறைந்து தற்போது தினசரி எண்ணிக்கை 2,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்றைய (ஆக. 20) நிலவரப்படி, 1,668 பேர் தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்புக்கு உள்ளாகினர். சென்னையில் 185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 24 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது, அமலில் உள்ள ஊரடங்கு 23-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்து, இன்று (ஆக.21) முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கல்வித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில், பள்ளிகள் திறப்பு, திரையரங்குகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், அதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுழற்சி முறை வகுப்புகளின் சாத்தியம் குறித்தும் முதல்வர் ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் பரவலாகத் தொற்று குறைந்தாலும், 18 மாவட்டங்களில் மாநில சராசரியைவிட தொற்று எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், பொதுமக்கள் பரவலாக முகக்கவசம் அணிவதில்லை எனவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கப்படுமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.