

பயணிகள் மூலம் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், ரயில்வே காவல் துறை சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. தொடர்ந்து 5 நாட்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 ஆயிரம் முகக் கவசங்கள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை ரயில்வே கூடுதல் டிஜிபி (பொறுப்பு)சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கிவைத்து, பயணிகளுக்கு இலவசமாக 25 ஆயிரம் முகக்கவசங்கள், கிருமிநாசினி, குளிர்பானங்கள், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இதில், ஐ.ஜி. கல்பனா நாயக், டிஐஜி ஜெயகவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ரயில்வே பெண்போலீஸாரின் ஆடல், பாடலுடன் கரோனா விழிப்புணர்வு நாடகம்நடைபெற்றது. இதில், ரயில்பயணத்தின்போது பயணிகள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
பயணிகள் வருகை அதிகரிப்பு
இதுகுறித்து கூடுதல் டிஜிபிசந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு தளர்வுகாரணமாக பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால், கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 47 ரயில்வே காவல் நிலையங்கள் சார்பில் தொடர்ந்து 5 நாட்களுக்குவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். ரயில் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.