

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி இருப்பதாகவும் அவை இருப்பில் இல்லாமல், பதிவேட்டில் மட்டும் உள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, யார்தவறு செய்திருந்தாலும் மின்சாரத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,830 மெகாவாட்டும் மேட்டூரில் 1,440 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இவ்விரு அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி, ஒடிஷா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கப்பல் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் நிலக்கரி, கன்வேயர் பெல்ட் மூலம் வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு கொண்டு வந்து, திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டு, அனல் மின் நிலையங்களின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பகுதி, நிலக்கரி வைக்கப்பட்டுள்ள திறந்த வெளி சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது:
வடசென்னை அனல் மின் நிலையத்தில், நிலக்கரி இருப்பு குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குநர் உற்பத்தி, இயக்குநர் விநியோகம், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய உயரதிகாரிகள் கடந்த 6-ம் தேதி முதல், 9-ம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், கடந்த மார்ச் 31-ம் தேதி வரையான இருப்பில், 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல், பதிவேட்டில் மட்டும் உள்ளது.
ரூ.85 கோடி மதிப்பிலான அந்த நிலக்கரி இருப்பில் இல்லாதது குறித்து, பதிவேட்டுக்கும், இருப்புக்கும் எப்படி இந்த வித்தியாசம் வருகிறது, இதில் என்ன தவறு நடந்திருக்கிறது என அடுத்த கட்ட ஆய்வுகளில் முழுவதும் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பின் உண்மை நிலை தெரியவரும்
வடசென்னை அனல்மின் நிலையம் நிலை 1, 7 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 100 நாட்களைக் கடந்து இயங்கி மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நிர்வாக குளறுபடிகளால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட மின்சார வாரியம் மீட்டெடுக்கப்பட்டு, இதுபோன்ற தவறுகள் களையப்பட்டு, வெளிப்படையான நிர்வாகம் முன்னெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் சண்முகம், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏடி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாமக்கலில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த, முன்னாள் மின்சாரத் துறைஅமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் அமைச்சராக இருந்தபோது, வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது நிலக்கரி கையிருப்பில் முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு முன்பாக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த ஆண்டு ஆகஸ்ட்6-ம் தேதி, நான் எடுத்து வைத்திருந்த நிலக்கரி தொடர்பான அறிக்கையை, முதல்வரிடம் காட்டிநல்ல பெயர் வாங்க முயற்சி செய்துள்ளார்.
இருப்பினும், நிலக்கரி விவகாரத்தில் யார் தவறு செய்தனர் என்றுஅமைச்சர் இதுவரை குறிப்பிடவில்லை. எனது மடியில் கனமில்லை என்பதால், வழியில் பயமில்லை. நான் எதற்கும் பயப்படப்போவதில்லை. விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கலாம்.
அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் எவ்வித தவறும் நிகழவில்லை. திமுக அமைச்சர்கள் வேண்டுமென்றே, அதிமுக அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.