

சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமின்றி கட்டப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, 2 பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பூங்கா அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் 864குடியிருப்புகள், 1,056 குடியிருப்புகள் கொண்ட 2 அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் சுவர்கள், படிக்கட்டுகள் உள்ளிட்டவை தரமின்றி கட்டப்பட்டுள்ளதால், பெயர்ந்து விழுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் உள்ளிட்டோர் அங்கு நேரில் ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் எம்எல்ஏ பரந்தாமன் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதில் அளித்தஅமைச்சர் தா.மோ.அன்பரசன், ‘‘அந்த கட்டிடத்தின் தரம் குறித்துஆய்வு செய்ய ஐஐடி வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில், தவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று கூறியதாவது:
குடிசை மாற்று வாரிய கட்டிட விவகாரம் தொடர்பாக உதவி செயற்பொறியாளர் அன்பழகன், உதவி பொறியாளர் பாண்டியன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஐஐடி வல்லுநர்களின் ஆய்வு அறிக்கை வந்தபிறகு, அதில் தவறு நடந்திருப்பது உறுதியானால் தொடர்பு உடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அரசு தவறுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் கருப்பு பட்டியலில் வைக்கப்படுவார். அவர் மேற்கொண்டு வரும் மற்ற திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.