

``மத்திய அரசு கொண்டுவந்துள்ள மீன்வள மசோதா, மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே நிறைவேற்றப்படும்" என்று, மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசின் மீன்வள மசோதாவிலுள்ள அம்சங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்போம். மக்களின்கருத்துகளை கேட்டறிந்த பின்னர்தான் மசோதா நிறைவேற்றப்படும். ஆனால், இந்த மசோதா குறித்து மக்களிடம் பொய் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. பாரம்பரிய மீனவர்களுக்கான மீன் பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். தற்போது, தமிழக அரசின் மீன்பிடி சட்டத்தில் அனுமதி இல்லாமல் 12 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்கும் மீனவர்களின் மீன்கள் பறிமுதல் செய்வதோடு, ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசின் மீன்வள மசோதாவில் ரூ.ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், உள்நாட்டு மீனவர்களின் நலன்கள் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 12 முதல் 200 கடல் மைல் தொலைவுக்கு உட்பட்ட இடத்தில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் விசைப்படகுகளில் விசைத்திறன் அதிகரிக்கப்பட்டு அப்பகுதியில் மீன் பிடிக்க வழிவகை செய்யப்படும். மத்திய அரசுரூ.20 ஆயிரம் கோடியை மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கியுள்ளது. மீன்பிடி விசைப் படகுகளுக்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடற்பாசி உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கான விசைப் படகுகளின் கட்டுமான நிறுவனம் கொச்சியில் உள்ளதுபோல், தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியார் பயின்ற வகுப்பறைக்கு சென்று,மத்திய இணையமைச்சர் முருகனும், மாநில பாஜக தலைவர்அண்ணாமலையும் பார்வையிட்டனர். தொடர்ந்து விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவு தினத்தையொட்டி அவரது மணி மண்படத்திலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.