

சென்னை மாநகரப் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என 100 சதவீதம் வகை பிரித்து பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழுத் தலைவர் நீதிபதி பி.ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு சார்பில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் திடக்கழிவு மேலாண்மைக்கான மாநில கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்புக் குழுவின் தமிழ்நாடு தலைவராக நீதிபதி பி.ஜோதிமணி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை மாநகரப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை நிலை குறித்து திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் ஆய்வு செய்தார்.
அப்பகுதிகளில் வீடுகள்தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை வகை பிரித்து சேகரிக்கும் பணிகள், குப்பைகளை முறைப்படி பதனிடும் பணிகள், இயற்கை உரம் தயாரிப்பு போன்ற பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, மணலி மண்டலம், எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள 10 டன் திறன் கொண்ட எரியூட்டு கலன் மற்றும் மாதவரத்தில் செயல்பாட்டில் உள்ள காற்றுப்புகும் வகையிலான பதனிடும் மையத்தை பார்வையிட்டார்.
பின்னர், “மாநகரப் பகுதிகளில் குப்பைகளை வகை பிரித்துப் பெறுவது திருப்திகரமாக இல்லை. அதை மேம்படுத்த வேண்டும். 100 சதவீதம் வகை பிரித்து பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மாநகரப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்” என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார மேற்பார்வை பொறியாளர் தேவேந்திரன், மண்டல அலுவலர்கள் சசிகலா, பால் தங்கதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.