

மாநிலங்களவை இடைத்தேர் தலில் அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வுபெற்றதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவை திமுக உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி தன் பதவியை கடந்த ஏப்ரல் மாதம் இழந்தார். இதனால் மாநிலங்களவையில் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் ஜூலை 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞரும், டிஎன்பிஎஸ்சி தலைவருமான ஏ. நவநீதகிருஷ்ணன் மனுத்தாக்கல் செய்தார். இதுதவிர, கே.பத்மராஜன் உள்பட மூன்று சுயேச்சைகளும் மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையில் சுயேச்சைகளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியானது.
இந்த நிலையில், மாநிலங்க ளவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளருமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.