தாழம்பூர் வனப்பகுதியில் ரூ.13 கோடி மதிப்புள்ள திமிங்கல கொழுப்பு பறிமுதல்: 9 பேர் கொண்ட கடத்தல் கும்பலை கைது செய்த வனத்துறையினர்

பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல கொழுப்பு.
பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல கொழுப்பு.
Updated on
2 min read

தாழம்பூர் வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட ரூ.13 கோடி மதிப்புள்ள (ஆம்பர் கிரீஸ்) எனப்படும் திமிங்கல கொழுப்பை பறிமுதல் செய்த வனத்துறையினர், கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாழம்பூர் வனப்பகுதியில் பல்வேறு சட்ட விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இந்த வனப்பகுதியில் பல்வேறு மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படும் திமிங்கலத்தின் கொழுப்பை (ஆம்பர் கிரீஸ்) கடலூரைச் சேர்ந்த கடத்தல்கும்பல் ஒன்று பெங்களூர் - கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கும்பலுக்கு விற்பனை செய்வதற்காக வனப்பகுதிக்கு வருவதாக, வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண், சென்னை வனச்சரக அலுவலர் ராஜேஷ் தலைமையில் வனவர்கள் பிரசாந்த், ராஜன்பாபு, செல்வராஜ், குமரேசன், வனக் காப்பாளர்கள் தீனதயாளன், சதாம் உசேன், மதன்குமார், பாலகணேசன், சிவக்குமார்ஆகியோர் அடங்கிய வனத்துறையினர் மாறுவேடத்தில் நேற்று முன்தினம் தாழம்பூர் வனப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிந்தனர். அப்போது, வனப்பகுதியில் சுற்றித் திரிந்தமூன்றுபேரை மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திமிங்கல கொழுப்பை வாங்குவதற்காக பெங்களூரைச் சேர்ந்த கும்பல ஒன்று வனப்பகுதிக்கு வருவது தெரிந்தது. இதையடுத்து, பிடிபட்ட நபர் மூலம் செல்போனில் அந்த கும்பலை தொடர்பு கொண்டு மேலக்கோட்டையூர் வனப்பகுதிக்கு வருமாறு அழைத்தனர். அங்கு வந்த 6 பேர் கொண்ட கடத்தல் கும்பலை மறைவில் இருந்த வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த மோகன்தாஸ்(34), சிதம்பரத்தைச் சேர்ந்த அருள்முருகன்(30), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விக்னேஷ்(30), பெரும்புதூர் நடுவீரப்பட்டைச் சேர்ந்த ஆதித்யா(43), சென்னை அருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜன்(51), நெற்குன்றத்தைச் சேர்ந்த முருகன்(48), பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தைச் சேர்ந்த மோகன், பெங்களூரைச் சேர்ந்த சதிஷ்குமார்(50), தாம்பரத்தைச் சேர்ந்த டேனியல்(53) ஆகியோர் இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. அவர்களிடமிடருந்து ரூ.13 கோடி மதிப்பிலான 13 கிலோ திமிங்கல கொழுப்பு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள், கார் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து, திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் கூறியதாவது: திமிங்கல கொழுப்பு (ஆம்பர் கிரீஸ்) ஆபரணங்கள், வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் ஆண்மை விருத்திக்கான மூலிகை மருந்து தயாரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. இந்த கொழுப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பொன் நிறத்தில் காணப்படும். மேலும், முறையே மீன் ஆம்பர், பூ ஆம்பர், பொன் ஆம்பர் என அழைக்கப்படுகிறது. கள்ளச்சந்தையில் பொன் ஆம்பர் கிரீஸ் ஒரு கிலோ ரூ.1.50 கோடி வரை விலை போகிறது. நம்நாட்டில் திமிங்கல கொழுப்பை சேகரிக்கவும், பாதுகாக்கவும் தடை உள்ளது. இந்நிலையில், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த கடத்தல் கும்பல் ஆம்பர் கிரீஸை விற்பனை செய்வதற்காக தாழம்பூர் வனப்பகுதிக்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சரியான முறையில் திட்டமிட்டு நாங்கள் கடத்தல் கும்பலை கைது செய்தோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in