

வீட்டுவசதி வாரியத்தில் வீடு, காலிமனை, கடைக்கான விற்பனைப் பத்திரம் பெறாதவர்கள், வரும் 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுவரை கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள விற்பனைப் பத்திரங்களை உடனடியாக வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், இதுவரை 1,021 விற்பனைப் பத்திரங்கள் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த விவரங்களைக் கேட்டறிந்த முதல்வர், மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி, மீதமுள்ளவர்களுக்கும் விற்பனைப் பத்திரங்களை வழங்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 24, 25, 26-ம் தேதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
எனவே, விற்பனைப் பத்திரம்பெறாதவர்கள் இந்த முகாமைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.முகாமுக்கு வருபவர்கள், அனைத்து ஆதார ஆவணங்களையும் முகாமுக்கு கொண்டுவர வேண்டும்.
மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
முகாம் குறித்த விவரங்களை 1800-599-6060 , 1800-599-01234 என்ற இலவச தொலைபேசி எண்களில் ஆக. 20 (நேற்று) முதல் அனைத்து நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
முகாமுக்கு வரும் பொதுமக்கள், அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்து, தங்களது குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்.
ஒதுக்கீடு பெற்றவர்கள் வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகையில் நிலுவை இருந்தாலோ, முதல் ஒதுக்கீட்டுதாரர்களிடம் சொத்தை வாங்கியவர்கள், அதற்குண்டான ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருந்தாலோ, நிலத்தை வாரியம் கையகப்படுத்தியதை எதிர்த்து நில உரிமையாளர் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலோ, விற்பனைப் பத்திரம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த விஷயத்தில் வழக்குகளை விரைவாக முடிக்க, வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும். மற்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதில், ஒதுக்கீடுதாரர்கள் கவனம் செலுத்த வேண்டும். விற்பனைப் பத்திரம் பெற வருவோரும், வாரிய அதிகாரிகளும் இணைந்து பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
முகாமுக்கு வருவோரை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும். அவர்களுக்கு உதவியாகவும், வழிகாட்டியாகவும் இருந்து, குறைகளுக்குத் தீர்வுகாண, முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.