

சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கும் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா(73) நடத்தி வருகிறார். இவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாமல்லபுரம் மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிவங்கர் பாபாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு, சிபிசிஐடிவிசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், சிவசங்கர் பாபா சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது 3 முறை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த ஜூன், 16-ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த சீடர் சுஷ்மிதாவும்(34)கைது செய்யப்பட்டார். இவர், ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் கிடைக்காததால், தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே ஒரு ‘போக்சோ’ வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் 300 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் 3-வது ‘போக்சோ’ வழக்கில் சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு, குற்றப் பத்திரிகை தயாரிக்கும் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்து விட்டன. அவை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த டி.எஸ்.பி குணவர்மன், சென்னை மாநகராட்சி விஜிலென்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.