Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

வாடகைக் கட்டிடத்தின் மாடியில் விஏஓ அலுவலகம்: பண்டரக்கோட்டை கிராமத்தினர் அவதி

பண்ருட்டி வட்டம் பண்டரக் கோட்டை கிராம நிர்வாக அலுவலர்அலுவலகம் அதே கிராமத்தில் உள்ளது. ஆனால் அந்த அலுவலகத்தை பயன்படுத்தாமல், சுமார் 2 கி.மீ தொலைவில் புதுப்பேட்டையில் சொந்த செலவில் வாடகைக்கு அலுவலகம் அமைத்துள்ளார் கிராம நிர்வாக அலுவலர் தாமோதரன்.

அவ்வாறு அமைக்கப்பட்ட அலுவலகமும் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருப்பதால் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டோர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

‘விண்ணப்பத்திற்கு குறிப்பிட்டத் தொகை தந்தால் தான் கையெழுத்து’ என்ற கறார் நிலையால் ஏற்கெனவே நொந்து போய் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வருவதாக தெரிவிக்கும் இக்கிராம மக்கள், தங்களுக்கு இது கூடுதல் சலிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

‘அரசின் கட்டிடத்தில், உள்ளூரில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்க வேண்டும். வார நாட்களில் காலை 10 முதல் 12 மணி வரை அலுவலகத்தில் இருந்து, பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்த பின்னர். பிற்பகல் இதர வெளி பணிகளுக்குச் செல்ல வேண்டும்’ என அரசின் விதி இருந்தும் அதை பின்பற்றுவது இல்லை. இதுகுறித்து பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தும், எந்தப் பயனும் இல்லை என்கின்றனர் பண்டரக்கோட்டை கிராம மக்கள்.

புதுப்பேட்டை வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்த தாமோதரனை சந்தித்து, கிராம மக்களின் இந்தப் புகார் குறித்து கேட்டபோது, “பண்டரக்கோட்டையில் உள்ள அலுவலகம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இங்கு தான் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு எனது சொந்த செலவில் ரூ.1,200 வாடகை வழங்கி வருகிறேன்.

பண்டரக்கோட்டை, கோட் லாம்பாக்கம், வாணியம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடுவே புதுப்பேட்டை இருப்பதால், இப்பகுதி மக்களின் நலன் கருதியே இங்கு அலுவலகம் அமைக்கப்ப்டடுள்ளது. மற்றபடி கூடுதல் தொகைகள் எதுவும் வாங்கவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x