Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM

ஆண்டுக்கு ரூ.28 லட்சம் நகராட்சி வருவாய் ஈட்டியும் அடிப்படை வசதிகள் இல்லாத பண்ருட்டி பேருந்து நிலையம்: இருக்கை வசதிகள் இல்லாததால் பயணிகள் வேதனை

இருக்கை இல்லாததால் பேருந்து நிலையத்தில் தரையில் அமர்ந்திருக்கும் பயணிகள்.படம் : ந.முருகவேல்.

விருத்தாசலம்

பண்ருட்டி பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கும் பேருந்து நிலையத்துக்கு ஆண்டுக்கு ரூ.7 ஆயிரத்தை குத்தகைக் கட்டணமாக நகராட்சி நிர்வாகம் செலுத்துகிறது. ஆண்டுக்கு அதே பேருந்து நிலையத்தின் மூலம் ரூ.28 லட்சம் வருவாய் ஈட்டியும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவில்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கன்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உலகளந்த பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது. சென்னை-கும்பகோணம் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையத்தில் தினந்தோறும் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. தினசரி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புழங்குகின்றனர். பேருந்து நிலையப் பகுதியில் சுமார் 100 கடைகள் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வருவாய் ஈட்டப்படுகிறது.

இப்பேருந்து நிலையத்தில்பயணிகளின் நலன்கருதி அமைக்கப்பட வேண்டிய இருக்கைகள்,நிழற்குடைகள் இல்லாததால்பயணிகளில் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் உட்கார முடியாமல் அவதிக்குள்ளாக் கின்றனர். கடலூர் மற்றும் விழுப்புரம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மழை வெயிலில் இருந்து பாதுகாக்க போதிய நிழற்குடைகளும் இல்லாததால், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தஞ்சமடையும் நிலை உள்ளது.

மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலுட்டும் அறை இரவு நேரங்களில் மதுபான கூடமாக மாறிவிடுகிறது. பேருந்து நிலையத்தில் சிற்றுண்டிகள் விற்பனை செய்வோர் பேருந்தினுள் ஏறி பயணிகளுக்கு சிரமம்ஏற்படுத்துவதாகவும் பேருந்து பயணிகள் தெரிவிக்கின்றனர்.

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இயங்கும் பேருந்து நிலையத்துக்கு ஆண்டுக் குத்தகைக் கட்டணமாக ரூ.7 ஆயிரம் மட்டுமே நகராட்சி நிர்வாகம் செலுத்துகிறது. ஆனால் பேருந்து நிலையம் மூலம் ஒரு ஆண்டுக்கு ரூ.28 லட்சம் வரை வருவாய் ஈட்டும் நிலையில், பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன் வராதது ஏன் என ஊர்மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி ஆணையர் பொறுப்பு வகிக்கும் ரவியிடம் கேட்டபோது, "இருக்கைகள் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் அமைக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x