

திருப்புவனம் அருகே முதுவன்திடலில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் பூக்குழி இறங்கி மொகரம் பண்டிகையை இந்துக்கள் கொண்டாடினர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முதுவன் திடலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான முஸ்லிம்கள் வசித்தனர். மத ஒற்றுமையைப் போற்றும் வகையில் ரம்ஜான், மொகரம், தீபாவளி உள்ளிட்ட இரு மதப் பண்டிகைகளையும் முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடி வந்தனர்.
காலப்போக்கில் இங்கு வசித்த முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து விட்டனர். ஆனாலும் இங்குள்ள இந்துக்கள், மொகரம் பண்டிகையைத் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
மொகரத்தையொட்டி இங்குள்ள பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில் கடந்த 11-ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 7-ம் நாள் சப்பர பவனி நடந்தது. மொகரம் பண்டிகையான நேற்று அதிகாலை 3 மணிக்கு பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பாக இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பெண்கள் முக்காடு போட்டுக் கொண்டு தங்கள் தலையில் தீ கங்குகளை கொட்டி பூ மெழுகுதல் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதைத்தொடர்ந்து சப்பர ஊர்வலமும் நடந்தது.