சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பின் ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்க நடவடிக்கை: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பின் ஓட்டுநர், நடத்துநர்கள் நியமிக்க நடவடிக்கை: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
Updated on
1 min read

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பின், போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து 14 வழித்தடங்களில் 8 நகரப் பேருந்துகள் உட்பட 12 பேருந்துகளின் சேவையை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் மினி பஸ்கள் படிப்படியாக இயக்கப்படும். கடந்த ஆட்சியைபோல இனிமேல் போக்குவரத்துத் துறையில் ஊழல் நடக்காது. புதிய பேருந்துகளை ஜெர்மனியிலிருந்து வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசுப் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 4,000 பேர் பற்றாக்குறையாக உள்ளனர். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு முதல்வருடன் கலந்தாலோசித்து ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏக்கள் எம்.சின்னதுரை, வை.முத்துராஜா, கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், புதுக்கோட்டை பொது மேலாளர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in