Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM
திருநெல்வேலியில் விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவுதினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 250-வது நினைவுதினத்தை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, எம்.பி.க்கள் பா.செல்வராஜ், சா.ஞானதிரவியம், எம்எல்ஏக்கள் மு. அப்துல்வகாப், ஈ. ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:
வீரபாண்டிய கட்டபொம்ம னுக்கு முன்னரே திருநெல்வேலி சீமையின் நெற்கட்டும் செவல் பகுதியில் மாவீரன் பூலிதேவன் வெள்ளையரை எதிர்த்து போரிட்டார். வெள்ளையருக்கு எதிரான பல போர்களில் பூலிதேவனுக்கு முதன்மை படைத்தலைவராக இருந்தவர் மாவீரர் ஒண்டிவீரன். திருநெல்வேலி மாவட்டம் வீரம் செறிந்த மாவட்டம். சுதந்திர போராட்ட காலங்களில் பல சுதந்திர போராட்ட வீரர்கள் இங்கு உருவாகியுள்ளார்கள். பூலித்தேவர், ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார் போன்ற பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகளுக்கு நினைவுச் சின்னங்களை, முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார், என்று தெரிவித்தார்.
கட்சிகள் அஞ்சலி
பாளையங்கோட்டையிலுள்ள ஒண்டிவீரனின் நினைவு மண்டபத்திலுள்ள சிலைக்கு பல்வேறு கட்சிகள், அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் மகாராஜன், மாநில துணைத் தலைவர் துரைச்சாமி, காங்கிரஸ் முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், அதிமுக மாவட்டச் செயலாளர் கணேசராஜா, அமமுக மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, மாவட்டச் செயலாளர் பரமசிவம், தேமுதிக மாவட்டச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், மதிமுக மாவட்டச் செயலாளர் நிஜாம், தமாகா மத்திய மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர் நலச்சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை, ஆதித்தமிழர் பேரவை மாநில தலைவர் அதியமான், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், தமமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் துரைப்பாண்டியன், தமிழ்புலிகள் அமைப்பு மாநிலத் தலைவர் திருவள்ளுவன், புரட்சிபாரதம் மாவட்டச் செயலாளர் நெல்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் மாவட்டத் தலைவர் மோகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நினைவிடத்தில் ஆட்சியர் மரியாதை
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், நெல்கட்டும் செவல் அருகே பச்சேரி பகுதியில் உள்ள ஒண்டி வீரன் நினைவிடத்தில் நினைவுத்தூணுக்கு தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ஒண்டி வீரன் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் 4 ஏடிஎஸ்பிகள், 10 டிஎஸ்பிகள், 36 இன்ஸ்பெக்டர்கள், 103 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1,242 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து மக்கள் வருவதைத் தடுக்க பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT