Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM

தெள்ளார் அருகே 7-ம் நூற்றாண்டு லகுலீசர், பிள்ளையார் சிலைகள் கண்டெடுப்பு: திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு தகவல்

பிள்ளையார் சிலை.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் அருகே விழுப்புரம் மாவட்டம் எல்லையில் அமைந்துள்ள மாம்பாக்கம் கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான லகுலீசர், பிள்ளையார் சிலைகள் மற்றும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மரபுசார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாம்பாக்கம்கிராமத்தின் சாலையோரத்தில் உள்ள ஒரு மாமரத்தின் அடியில் சதுர வடிவில் ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், அதன் அருகே 2 பலகை சிற்பங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த லகுலீசர் மற்றும் பிள்ளையார் சிலைகள் என தெரியவந்துள்ளது.

சைவப்பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தைத் தோற்றுவித்தவர் லகுலீசர். குஜராத் மாநிலம், காயரோஹனகத்தில் லகுலீசரால் தோற்றுவிக்கப்பட்ட பாசுபதம், தனது சீடர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. கி.பி. 3-ம் நூற்றாண்டுக்கு பிறகு, தமிழகநிலப்பரப்பில் பாசுபதம் வளர்ச்சிபெற்று, பல்லவர்கள் காலத்தில் சிறப்புற்று இருந்தது. தமிழகத்தில் 30-க்கும் குறைவானலகுலீசர் சிலைகள் கண்டறியப்பட் டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தது. இதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 லகுலீசர்கள் சிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கற்பலகையில் புடைப்பு சிற்பமாக லகுலீசர் வடிக்கப்பட்டுள்ளார். அவரது தலையை முடிச்சுடன் கூடிய அழகான ஜடாபாரம் அலங்கரிக்க, இரு செவிகளிலும் பத்ர குண்டலமும், பெரிய விழிகளும், தடித்த உதடும் கொண்ட நீள்வட்ட முகம், லேசாக சாய்ந்தவாறு அமைந்துள்ளது. அவரின் வலது கையில், தனது ஆயுதமான தடி போன்ற லாங்குலத்தை கடக முத்திரையில் தாங்கி நிற்க, இடது கையை கடி முத்திரையுடன், இடையின் மீது வைத்துள்ளார். லாங்குலத்தில் அடிப்பகுதி மெல்லி யதாகவும், அதன் மேல்பகுதி பருமனாகவும் காட்சித் தருகிறது. கழுத்தில் அணிகலனாக சரபளியும், வயிற்றில் உதரபந்தமும் கொண்ட இடை ஆடையுடன் பத்மாசனத்தில் அமர்ந்து காட்சித் தருகிறார். வழக்கமாக, தண்டத்துடனோ அல்லது தனியாகவோ காட்சிப்படுத்தப்படும் நாகம், இந்த சிலையில் காணப்படவில்லை. இச்சிற்ப அமைதியை வைத்து பார்க்கும் போது, இது 7-ம் நூற்றாண்டின் கடைசி பகுதி அல்லது 8-ம் நூற்றாண்டின் தொடக்கக் காலமாக இருக்கலாம்.

3 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கற்பலகை யில் நான்கு கரங்களுடன் பிள்ளையார், புடைப்பு சிற்பமாக வடிக்கப் பட்டுள்ளார். தலையை கரண்ட மகுடம் அலங்கரிக்க, தனது மேல் வலது கரத்தில் நெற்பயிரையும், மேல் இடது கரத்தில் அக்கமாலையுடன், இரண்டு கரங்களையும் தொடையின் மீது வைத்துள்ளார். இரண்டு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். பெரியகாது மடல்களுடன், கீழ் நோக்கிஇடப்பக்கம் சுருளும் துதிக்கை யுடன் இடம்புரி பிள்ளையாராக கம்பீரத்துடன் காட்சித் தருகிறார்.

தும்பிக்கையின் வலது பக்கத்தில் கூறிய தந்தமும், இடது பக்கத்தில் சிறிய தந்தமும், தோளின் வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக சரியும் பட்டையான முப்புரி நூலும், இரு கைகளில் தோள்வளையும், இடையில் உதரபந்தமும் அணிந்து அழகுற காட்சித் தருகிறார்.

வளமையின் குறியீடாக சொல் லப்படும் நெற்பயிரை ஆயுதமாக கொண்டு, வெகு சில பிள்ளையார்கள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் சிற்ப அமைதியை கொண்டு, இதன் காலமும் லகுலீசரின் காலத்துடன் ஒத்து போகலாம். லகுலீசர் கண்டறி யப்பட்டுள்ள இடங்களில், இதுபோன்ற பிள்ளையார்களும் கண்ட றியப்பட்டுள்ளது. மேலும், இதே காலத்தைச் சேர்ந்ததாக சதுர ஆவுடையுடன் கூடிய சிவலிங்கமும் இருக்கலாம். மூன்று சிற்பங்களும் கிடைத்துள்ள இடத்தில், 7-ம் நூற்றாண்டு காலத்தில் பல்லவர் காலத்திய சிவாலயம் இருந்திருக் கக் கூடும்.

காலத்தின் ஓட்டத்தால், ஆலயம் அழிந்து, 3 சிலைகள் மட்டுமே காலத்தின் சாட்சியாக எஞ்சியிருக்கிறது. தொன்மையான சிலைகளை மக்கள் முறையாக பாதுகாத்து, வழிபாடு செய்வதன் மூலமாக இறைவனுக்கும், சிலைகளை வடிவமைத்த சிற்பிக்கும் நாம் செய்யும் நன்றிக் கடனாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x