

ஒரு அடிக்கும் குறைவான உயரம் கொண்ட பசுங்கன்று, தாயிடம் பால் குடிக்க முடியாமல் அவதியுறும் நிகழ்வு பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த நலன்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி விஜயன். இவரின் வளர்ப்புப் பசு நேற்று மூன்றாவது முறையாகக் கன்றை ஈன்றுள்ளது. ஆனால் அந்த பசுங்கன்று சராசரி அளவைக் காட்டிலும் தரையோடு தரையாக தவழ்ந்து செல்லும் வகையில், சுமார் ஒரு அடிக்கும் குறைவான உயரமே உள்ளது. இதனால், தாய்ப் பசுவிடம் பால் குடிக்க முடியாமலும் நடக்க முடியாமலும் தவித்து வருகிறது கன்று.
கன்றை ஈன்ற தாய்ப் பசுவோ, கன்றைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறது. இதனால் பசுவை வைத்திருக்கும் விவசாயி விஜயன் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சுற்றுவட்டார மக்களும் குறைந்த உயரம் கொண்ட பசுங்கன்றைப் பார்த்துவிட்டு சோகத்தோடு செல்கின்றனர்.
இதே பசு ஏற்கெனவே இரு கன்றுகளை ஈன்றபோது சரியான அளவில் கன்றுகள் இருந்ததாகக் கூறும் விஜயன், கன்றுக்குட்டி மீது தங்கள் குடும்பத்தினர் அதிகப் பாசத்துடன் இருப்பதாகவும், தற்போது பாட்டில் மூலம் பால் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.