Published : 20 Aug 2021 07:50 PM
Last Updated : 20 Aug 2021 07:50 PM

2 ஆண்டுகளாக வைகை ஆற்றில் வீணாகக் கலக்கும் மழைநீர்: தீர்வை எதிர்நோக்கி மக்கள்

மதுரை

மதுரை மாநகரின் பிரதானக் குடிநீர் ஆதாரமான வண்டியூர் கண்மாயில் மழைநீரைச் சேகரிக்கப் பொதுப்பணித்துறை ஆர்வம் காட்டாததால் கண்மாய் முழுவதும் மண்மேடாகி ஆகாயத் தாமரைகள் நிறைந்து, தண்ணீர் வீணாக வைகை ஆற்றில் சென்று கலக்கிறது.

கடந்த அரை நூற்றாண்டிற்கு முன்பு வரை கண்மாய்கள் நிறைந்த மாநகராக மதுரை திகழ்ந்தது. அதன்பிறகு நகர விரிவாக்கம், வளர்ச்சித் திட்டங்கள், அரசுக் கட்டிடங்களுக்காகக் கண்மாய்கள் பாழாக்கப்பட்டன. தற்போது அந்தக் கண்மாய்கள் இருந்த தடம் தெரியாத நிலையில் அவை இருந்த பகுதிகள் மாநகரின் முக்கியப் பகுதிகள் அதன் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

இதில், மதுரை கே.கே.நகரில் அமைந்துள்ள வண்டியூர் கண்மாய் மட்டுமே எஞ்சியிருக்கிறது. சுமார், 560 ஏக்கர் அளவிலே நகருக்குள் நாலாபுறமும் பறந்து விரிந்து காணப்படுகிறது.

இந்தக் கண்மாயில் உள்ள மண்ணை அள்ளி ஆழப்படுத்தி, கரைகளையும், கடைமடைகளையும் பராமரித்தாலே மாநகராட்சியின் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்கலாம். ஆனால், இந்தக் கண்மாயை நிர்வகிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளும் கடந்த கால் நூற்றாண்டாக கண்மாயில் மழைநீரைச் சேகரிக்க எந்தத் திட்டங்களையும் உருவாக்கவில்லை. மாறாக குடிநீர்த் திட்டங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கின்றனர்.

இந்நிலையில் கண்மாயை ஆழப்படுத்திப் பராமரிக்காததால் கடந்த சில மாதங்களாகப் பெய்யும் மழைநீர், முழுவதுமாகக் கண்மாயில் சேகரமாகாமல், கடைமடை வழியாக மறுகால் பாய்ந்து வைகை ஆற்றுக்குள் சென்று வீணாகிறது. பெரும் மழைக் காலத்தில் வண்டியூர் கண்மாய்க்கு சாத்தையாறு அணை முதல் பல்வேறு கண்மாய்கள், கிளை கால்வாய்கள் வழியாகத் தண்ணீர் பெருக்கெடுத்து வரும். அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கண்மாயில் சேகரிக்க முடியவில்லை. மேலும், கண்மாய் முழுவதும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் ஆகாயத் தாமரை நிறைந்து காணப்படுகிறது.

அதனால், நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. வண்டியூர் கண்மாயில் கடந்த 20 ஆண்டாக தண்ணீரைத் தேக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சியே செய்யாததால் கோடை காலத்தில் மதுரையில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் அடி வரை நிலத்தடிநீர் மட்டம் சென்று குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

வீட்டு உபயோகத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் மக்கள், மாநகராட்சிக் குடிநீரையே நம்பியிருக்கும் பரிதாப நிலை உள்ளது. மேல்தட்டு மக்கள், லாரித் தண்ணீரை வாங்கிப் பயன்படுத்தி விடுகின்றனர். கடந்த 2 ஆண்டாக மதுரையில் தொடர்ச்சியாக ஓரளவு நல்ல மழை பெய்ததால் மக்களுக்கு வண்டியூர் கண்மாயின் முக்கியத்துவமும், மழைநீரை சேகரிக்க வேண்டிய அவசியமும் தெரியவில்லை.

மாநகராட்சி நிர்வாகம், தனியார் பங்களிப்புடன் நகரில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களைத் தூர்வாரி தண்ணீரைத் தேக்கும் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. அந்த அடிப்படையில் வண்டியூர் கண்மாயை மாநகராட்சி கையில் எடுத்து மழைரைச் சேகரிக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து வண்டியூர் கண்மாய் பொதுப்பணித்துறை அதிகாரி சுபாஷினியிடம் கேட்டபோது, ‘‘கண்மாயில் சுற்றியுள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து அதிகளவு கழிவுநீர் கலக்கிறது. அதனால், ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளது. கழிவு நீர் கலப்பதைத் தடுக்கவும், அதைச் சுத்திகரித்து விடவும் மாநகராட்சியிடம் புகார் செய்துள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். கண்மாயில் நிரம்பியதாலேயே தண்ணீர் கடைமடை வழியாகச் செல்கிறது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x