Last Updated : 20 Aug, 2021 06:38 PM

 

Published : 20 Aug 2021 06:38 PM
Last Updated : 20 Aug 2021 06:38 PM

தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர் மூலம் 26 பேருக்கு கரோனா; சோதனை தீவிரம்

கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் காலனியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைப் பார்வையிட்ட சுகாதாரத்துறையினர்.

கோவை

கோவை கருமத்தம்பட்டி, செல்வபுரம் காலனி பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர் மூலம் 26 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதால் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் ஒரே பகுதியில் 3-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டால் அந்தப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. தொற்றுப் பரவலைத் தடுக்க அந்த வீடுகள், குடியிருப்புகளில் உள்ள நபர்கள் 14 நாட்கள் வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரே பகுதியில் 26 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் காலனியில் தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் ஒருவருக்கு முதலில் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், அந்தப் பகுதியில் 260 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை அந்தப் பகுதியில் மொத்தம் 26 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதையடுத்து தொற்று பாதித்த பகுதிகளில் தகர சீட் வைத்து அப்பகுதி முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பொதுமக்கள் வெளியே வர அனுமதி இல்லை. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்ய கருமத்தம்பட்டி பேரூராட்சி மூலம் 3 நபர் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை 28-ம் தேதி கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 92-ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாகக் கோவை மாநகராட்சியில் 34, மதுக்கரை வட்டாரத்தில் 10, பொள்ளாச்சி தெற்கு, காரமடை வட்டாரங்களில் தலா 8, துடியலூர் வட்டாரத்தில் 7, ஆனைமலை வட்டாரத்தில் 6 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. நேற்றைய நிலவரப்படி, முந்தைய ஏழு நாட்களில் கண்டறியப்பட்ட கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில், கோவை மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 38.81 சதவீதம் பேர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காரமடை, மதுக்கரை, துடியலூர், அன்னூர், சூலூர் வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் சுமார் 38 லட்சம் மக்கள் உள்ளன. இதில், 3.96 லட்சம் பேருக்கு இதுவரை இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 16.64 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல், இரண்டாம் தவணை தடுப்பூசிகள் சேர்த்து மொத்தம் இதுவரை 20.60 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு (சிஎஸ்ஆர்) நிதியைக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் மூலமும் பொதுமக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x