

இந்தியாவிலேயே முதல் முறையாக அணையின் பழைய கொள்ளளவை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையைத் தூர்வார தமிழக அரசு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 90 அடி. மொத்த நீர்ப்பரப்பு 113.76 ஹெக்டேர். மழைக் காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படும்போது வண்டல் மண் அடித்து வரப்பட்டதால் அணையின் நீர்மட்ட உயரம் வெகுவாகக் குறையத் தொடங்கியது. குறிப்பாக அணையை ஒட்டியுள்ள பகுதியில் வண்டல் மண் குவிந்ததால், அணையின் நீர்மட்டத்தில் 20 அடி வரை குறைந்தது. இதனால் நீர் தேங்குவது குறையத் தொடங்கியது. அணையின் நீர் மட்டத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் அதிக நீர் தேக்கலாம் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.
ஒட்டன்சத்திரம் தொகுதி எம்எல்ஏவும் உணவுத் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி, தனது தேர்தல் வாக்குறுதியில் பரப்பலாறு அணை தூர்வாரப்பட்டு அணையின் நீர்மட்டம் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்திருந்தார். தமிழக பட்ஜெட் உரையிலும் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டங்கள் அவற்றின் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படும் என அறிவிப்பு வெளியானது. அமைச்சர் அர.சக்கரபாணி முயற்சியின் பலனாகத் தமிழகத்தில் முதல் முறையாக ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையைத் தூர்வார அரசு ரூ.40 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
அணையில் தேங்கியுள்ள வண்டல் மண், விவசாயிகள் தங்களது நிலங்களில் பயன்படுத்த இலவசமாக வழங்கப்படவுள்ளது. வண்டல் மண்ணுக்குக் கீழே படிந்துள்ள மண்ணை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.44.80 லட்சம் வருவாய் கிடைக்கும்.
இதுகுறித்துப் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கோபி கூறுகையில், ''அரசின் உத்தரவால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நீர்த்தேக்கத்தின் ஆயுள் அதிகரிக்கும். நீர்ப் பாசனத் திறன் மேம்படுத்தப்படும். ஒட்டன்சத்திரம் நகராட்சியின் குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அரசுக்கு மணல் விற்பனை மூலம் 44,79,287 ரூபாய் வருவாய் கிடைக்கும்.
தூர்வாரும் பணிக்கான டெண்டர், முறைப்படி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து, பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெறும். அணையைத் தூர்வாரி நீர்மட்டத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவது என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை'' என்று தெரிவித்தார்.