இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: கோவை ஆட்சியர் அழைப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் (யுஒய்ஈஜிபி) மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2021- 22ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்துக்கு யுஒய்ஈஜிபி திட்டத்தின் கீழ் 325 திட்டங்களுக்கு ரூ.1.85 கோடி மானியம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 35 மற்றும் சிறப்புப் பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 45 இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் தகுதியானவர்கள் ஆவர்.

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குக் குறையாமல் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தித் தொழில்களை அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீட்டிலும், சேவை, வியாபாரத் தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் முதலீட்டிலும் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்குத் தமிழக அரசு சார்பில் 25 சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும்.

இதற்கு, www.msmetamilnadu.tn.gov.in/uyegp.php என்ற இணையதள முகவரியில் தொழில்முனைவோர் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு 89255 33932, 89255 33936 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்''.

இவ்வாறு கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in