

கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமற்றுக் கட்டப்பட்ட விவகாரத்தில், 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்புக் கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து, அங்கு சமீபத்தில் குடியமர்த்தப்பட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இக்கட்டிடத்தின் தரத்தைச் சிறப்புக் குழு அமைத்து சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறப்புக் குழுவின் ஆய்வறிக்கையைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும் தெரிவித்திருந்தார்.
நேற்று (ஆக.19) சட்டப்பேரவை கூடியதும், எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன், புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியக் கட்டிட விவகாரம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டிய உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாகப் பொறியாளர் அன்பழகன் ஆகியோர் இன்று (ஆக. 20) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.