

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு கோயில் நிலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்காக வீரசோழபுரம் என்னும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதற்காக உரிய அனுமதி, ஒப்புதல் பெறாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறி ரங்கராஜன் நரசிம்மன்தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்றஅவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை என அரசு தரப்பில்தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்ததாரர்தரப்பில், சுற்றுச்சூழல் மற்றும்நகரமைப்பு திட்ட இயக்குநர் அனுமதி பெற்றும் கட்டுமானப் பணியைமேற்கொள்ள முடியவில்லை என்பதால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, கோயில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டலாமா? வேண்டாமா என்பது குறித்து முதலில் முடிவெடுக்க வேண்டியிருப்பதாக கூறிய நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலககட்டுமான பணியை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.