

சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக, ரூ.7 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடுமாறு மதுரைதல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஏப்ரல் 3-ம்தேதி மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துமாறு நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவிட்டார். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழக்கு பதிவு செய்து விசாரிப்பதால் எந்தப்பலனும் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஆர்.ஹேமலதா உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியான எம்.நிர்மல்குமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், பிழைகள் கொண்ட மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, தொடர்ந்து வாய்தா கேட்டு வருகின்றனர். அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்கக்கூடாது என்று தெரிவித்தார். மேலும் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால், இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றுகூறி, வழக்கு விசாரணையை வரும் செப்.1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.