Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதை இல்லாத பதநீரை விற்பனை செய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி வலியுறுத்தல்

பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் பதநீர் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக உறுப்பினர் ஜி.கே.மணி வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பேசினர். அதற்கு நன்றி தெரிவித்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் உறுப்பினர்கள் பேசியதாவது:

செந்தில்குமார் (திமுக): சித்தர்களின் ஜீவ சமாதிகளை புனரமைக்க, மேம்படுத்திட புதிய திட்டத்தை முதல்வர் அறிமுகம் செய்யவேண்டும்.

மார்க்கண்டேயன் (திமுக): மானாவாரி பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் இழப்பீடு வழங்க வேண்டும்.

பிரின்ஸ் (காங்கிரஸ்): ரப்பர் மரத்தை தோட்டக்கலைத் துறை பயிருடன் கொண்டு வர வேண்டும். கேரளாவைப் போல ரப்பருக்கு அரசே விலையை நிர்ணயிக்க வேண்டும்.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): பண்ருட்டி, கன்னியாகுமரி உள்ளிட்ட பிறமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு முந்திரியை விவசாயிகள் எடுத்து வரும்போது வணிகவரித் துறை அதிகாரிகள் வரி விதிக்கின்றனர். அதனால் விவசாயிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வரிவிதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.கே.மணி (பாமக): பனைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. அதனால் பனை ஏறுவதற்கான கருவிகளை வழங்கி பனைத் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். பனை, தென்னையில் இருந்துஇறக்கப்பட்ட போதை இல்லாத பதநீரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரவைத் தலைவர்: பதநீரை 12 மணி நேரம் வைத்தால் கள்ளாக மாறிவிடும்.

ஜி.கே.மணி: பதநீரைப் பதப்படுத்தி விற்பனை செய்யவும், ஏற்றுமதி செய்யவும் ஆவன செய்ய வேண்டும்.

வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்: பனைஏறும் கருவிகள் வழங்க முதல்வர் அனுமதி அளித்துள்ளார். ‘நீராபானம்’ தயாரிக்க யார் முன்வந்தாலும் அரசு உதவத் தயாராக இருக்கிறது.

செல்வபெருந்தகை (காங்கிரஸ்): கருணாநிதி பெயரால் மண் உரிமைத் திட்டம் தொடங்க வேண்டும். ஏனென்றால், இந்திராகாந்தி கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட இடங்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டு, அங்கு அவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு மனைகளில் சட்டச் சிக்கல் இருக்கிறது. இதற்குத் தீர்வு கண்டு, மண் உரிமைத் திட்டம் அறிவிக்க வேண்டும். நாட்டுப்புறக் கலைகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூத்துப் பட்டறை உருவாக்க வேண்டும்.

வானதி சீனிவாசன் (பாஜக): கரும்பு விவசாயிகளுக்கான தொகையை இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.

பேரவைத் தலைவர்: விவசாயிகள் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தியதில்தான் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமைச்சர் கூறினார்.

வானதி சீனிவாசன்: இதுபோன்ற நடைமுறையில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அதைக் களையத்தான் வேண்டும். அதேநேரம் நாம் டிஜிட்டலை நோக்கி செல்வது முக்கியம் என்பதால் குறிப்பிடுகிறேன். வேளாண்நிதி நிலை அறிக்கை பத்தி 57-ல் மின்னணு ஏலம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. விளைபொருளுக்கு அதிக விலை கிடைக்கச் செய்வதுதான் விவசாயத்தில் அவர்களை நீடிக்கச் செய்யும். ஏற்கெனவே e-nam என்ற மத்திய அரசின் திட்டம் இருக்கிறது. அந்த திட்டத்துடன் இந்த திட்டத்தை இணைத்து, விவசாயிகளுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் வழங்கி அவர்களை மார்க்கெட்டிங் செய்ய வைக்க முடியும். இதை வேளாண் துறை அமைச்சர் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

மேலும், திமுக உறுப்பினர்கள் டாக்டர் எழிலன், கிருஷ்ணசாமி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோரும் இந்த விவாதத்தில் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x