

தூத்துக்குடியில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள், தெர்மல் நகர் கேம்ப்-2 கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் அங்கு வந்த காரை சோதனையிட்டனர். காரில் மெழுகு போன்ற பொருளை கண்டறிந்தனர். அது, திமிங்கலம் உமிழும் அரிய வகை பொருளான அம்பர் கிரீஸ் என்பது தெரியவந்தது.
காரில் இருந்த 23 கிலோ எடை கொண்ட அம்பர் கிரீஸை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் ஒரு கிலோ அம்பர் கிரீஸ் ரூ.1 கோடிக்கு விலை போகும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரீஸின் சர்வதேச மதிப்பு ரூ.23 கோடி எனவும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 பேர் கைது
அம்பர் கிரீஸை கடத்தி வந்ததாக திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (30), தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைசேர்ந்த பெரியசாமி(55), திருநெல்வேலி மாவட்டம் தருவையைச் சேர்ந்த பிரபாகரன்(39) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல் கடந்த ஜூனில் திருச்செந்தூர் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 2 கிலோ அம்பர் கிரீஸை போலீஸார் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர். அம்பர் கிரீஸ் தொடர்ந்து பிடிபடுவதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட கடற்கரைப் பகுதியை மத்திய, மாநில உளவுப் பிரிவினர் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
அம்பர் கிரீஸ்?
20 வயதுக்கு மேல் உள்ள திமிங்கலங்கள், உடலில் இருந்து உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளை வாய் வழியாக உமிழும். இதுவே, அம்பர் கிரீஸ். கடலில் மிதக்கும் தன்மை கொண்ட அம்பர் கிரீஸ் உயர்தர நறுமணப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் நறுமணப் பொருட்கள் தயாரிப்புக்கு அம்பர் கிரீஸ் பயன்படுத்தப்படுகிறது. எகிப்தியர்கள் பழங்காலத்தில் மருந்துப் பொருளாக இதை பயன்படுத்தியுள்ளனர். இந்தியாவில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.