

தமிழகத்தின் பெரிய மார்க்கெட்களில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து 60 சதவீத காய்கறிகள் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு செல்கின்றன.
கேரள மாநிலத்தின் முக்கியப் பண்டிகையான ஓணம் நாளை (ஆக.21) கொண்டாடப்படுகிறது. இதனால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கேரள வியாபாரிகள் காய்கறிகளை அதிகம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். வழக்கத்தைவிட பலமடங்கு அதிகம் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் கேரளாவுக்கு முருங்கை, வெண்டைக்காய், பூசணிக்காய், தட்டாங்காய், சுனாமி காய், கோவக்காய், வெங்காயம், தக்காளி என 150 டன்னுக்கு மேலான பல்வேறு காய்கறிகளை வாங்கி கேரள வியாபாரிகள் லாரிகளில் அனுப்பிவைத்தனர். 2-வது நாளான நேற்று 100 டன்னுக்கும் மேலான காய்கறிகள் அனுப்பிவைக்கப்பட்டன. முதல் நாள் வர்த்தகம் 2 கோடி ரூபாய்க்கும், 2-வது நாளான நேற்று ஒரு கோடி ரூபாய்க்கும் காய்கறிகளை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
கேரளாவில் கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த ஓணம் பண்டிகைக்கு காய்கறிகள் விற்பனையானதை விட இந்த ஆண்டு குறைவாகவே விற்பனையானதாக கமிஷன் கடை உரிமையாளர்கள் கூறினர்.