

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் தங்களது தொடக்க நிலை தர ஊதியத்தை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரத்து 400 ஆக உயர்த்த வேண்டும். ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். படித் தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
இதனால், இஎஸ்ஐ மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, மத்திய சுகாதாரத் துறை செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் அடிப்படை ஊதியம் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.
எனவே, இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். இவர்களது போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வு காலம் நெருங்கி வருவதால் இப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.