Published : 20 Aug 2021 06:40 AM
Last Updated : 20 Aug 2021 06:40 AM

முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தால் வீடு கிடைப்பதாக பரவிய வதந்தியால் தலைமைச் செயலகத்தில் கூடிய மக்கள்: காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு

முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தால் வீடு கிடைக்கும் என்று வதந்தி பரவியதையடுத்து, தலைமைச் செயலகத்தில் மனு அளிப்பதற்காக கூடிய பொதுமக்களை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களின் அடிப்படையில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. மனுக்களை பிரித்து துறைவாரியாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின்கீழ் வீடுகள் ஒதுக்கீடு, கட்டித்தருதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைத்து வருவதால், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் நாள்தோறும் மனுக்களை அளிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திங்கள், செவ்வாய் என வார முதல் நாட்களில் அதிகளவு கூட்டம் இருக்கும். காவல்துறையினர் அவர்களை ஒழுங்குபடுத்தி, மனுக்களை கொடுத்துச்செல்ல உதவுவார்கள். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக தலைமைச் செயலகத்துக்கு வீடு ஒதுக்கீடு கேட்டு அதிகளவில் மனுக்கள் வருவதாக கூறப்படுகிறது.

முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தால், குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்று வெளியான வதந்தியை நம்பி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நேற்று தலைமைச் செயலகத்தில் மனுக்களுடன் குவிந்தனர். சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சூழலில், பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து, குறிப்பிட்ட அளவு பொதுமக்களை மட்டுமே உள்ளே அனுப்பினர்.

இதனால் நுழைவுவாயிலில் காவல்துறையினர் சோதனை செய்யும் பகுதியில், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. நீண்டதூரம் நடைபாதையில் காத்திருந்த பெண்கள், அங்கிருந்த தடுப்புகளை தாண்டி வெளியில் வர முயற்சித்ததுடன், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூட்டம் தொடர்ந்து அதிகரித்த நிலையில், அப்பகுதியில் காவல்துறையினர், பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்த கம்பம் உடைந்து விழுந்ததில், அப்பகுதியில் நின்றிருந்த மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், கரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கும் அரசு, சமூக இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

‘முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்தால் வீடு கிடைக்கும் என்று தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினரும் பொதுமக்களிடம் நிலைமையை புரியவைத்து, அவர்களை பொறுமையாக கையாள அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்’ என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x