

ஆவணி முதல் முகூர்த்தம் என்ப தால் திருவண்ணாமலையில் உள்ள பிரதான கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியதால், கரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற் பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கடந்த 16-ம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூடப்படுகிறது. கடைகள் மூடப்படுவதை காவல் துறையினர், வருவாய்த் துறை யினர், உள்ளாட்சித் துறையினர் கண்காணித்து உறுதி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆடி மாதம் முடிந்து கடந்த 17-ம் தேதி தொடங்கிய ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த தேதியாக இன்று (20-ம் தேதி) உள்ளது. வளர்பிறை முகூர்த்தம் என்பதால் திருமணம், வீடு கிரகபிரவேசம், கடைகள் திறப்பு என பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனால், சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை வாங்க, திருவண் ணாமலை நகரில் பொதுமக்கள் நேற்று குவிந்தனர்.
மளிகைக் கடைகள், காய்கறி அங்காடிகள், துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால், திருவண்ணாமலை நகரின் பிரதான வீதிகளான தேரடி வீதி, கடலைக் கடை சந்திப்பு, திருவூடல் தெரு மற்றும் பெரிய தெரு உள்ளிட்ட பிரதான வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காணும் இடங்கள் எல்லாம், அலை அலையாய் மக்கள் நகர்ந்தனர். நகர மற்றும் கிராமங்களில் இருந்து அதிகளவில் மக்கள் திரண்டதால், மேற்கண்ட வீதிகளில் மிக கடுமையாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
நடந்து செல்வதற்கு கூட வழியில்லை. இரு சக்கர வாக னங்கள், ஆட்டோக்கள், கார்கள் மற்றும் பேருந்துகள் ஆகியவை போக்குவரத்து பாதிப்பில் சிக்கிக் கொண்டதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அன்றாட பணி மற்றும் அத்தியாவசிய தேவைக்காக சென்றவர்களும் பாதிக்கப்பட்டனர். போக்கு வரத்தை சரி செய்ய போதிய எண்ணிக்கையில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்படாத காரணத்தால், போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்தது. பின்னர், வெளி யூர்களில் இருந்து வந்தவர்கள் புறப்பட்டு சென்றதும், இயல்பு நிலைக்கு போக்குவரத்து திரும்பியது. இதனிடையே மாலை 5 மணிக்கு நேரக் கட்டுப்பாடும் அமலுக்கு வந்துவிட்டது.
கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்கு மூடப்படும் என்ற அறிவிப்பு எதிரொலியாகவே, மக்கள் கூட்டம் அதிகளவில் கூடிய தாக கூறப்படுகிறது. முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை காற்றில் பறந்தன. கரோனா தடுப்பு என்ற பெயரில், கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நிலையில், இதுபோன்று கூட்டம் கூடுவதால், கரோனா தொற்று பரவலுக்கு வழி வகுத்து விடுகிறது. வரும் காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்தால்தான், கரோனா தொற்று பரவலை கட்டுக்குள் வைக்க முடியும் என சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.