ரூ.10,605 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடு: சட்டப்பேரவையில் தாக்கல்

ரூ.10,605 கோடிக்கு இறுதி துணை மதிப்பீடு: சட்டப்பேரவையில் தாக்கல்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் 2015-16-ம் ஆண்டு துணை மானிய கோரிக்கை களுக்கு ரூ.10,605 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்குவது தொடர்பான இறுதி துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

பேரவையில் நேற்று இறுதி துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

பேரவையில் தாக்கல் செய்யப் படும் இந்த துணை மதிப்பீடுகள் ரூ.10,605 கோடியே 30 லட்சத்துக் கான நிதி ஒதுக்க வழி செய் கின்றன. இவற்றில் ரூ.8,088 கோடியே 89 லட்சம் வருவாய் கணக்கிலும், 2,516 கோடியே 41 லட்சம் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரணம், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.3,039 கோடியே 24 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் குடிசைவாழ் குடும்பங் களை மறு குடியமர்த்தவும், வசதி கள், உதவிப்படிகள் வழங்கவும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.107 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களால் நடத் தப்படும் ஊரக மற்றும் நகர்ப்புற ரேஷன் கடைகளுக்கு 2010-11 முதல் 2013-14 வரையிலான காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய ரூ.102 கோடியே 93 லட்சம் அனு மதித்துள்ளது. 2011-12ல் தரம் உயர்த் தப்பட்ட 553 உயர்நிலைப் பள்ளி களுக்கு ரூ.616 கோடியே 31 லட்சத் தில் கூடுதல் கட்டிடங்கள் கட்ட நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. தேசிய ஊரக குடிநீர் திட்டத்துக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.229 கோடியே 46 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரை 20 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றவும், படப்பை புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தவும் ரூ.189 கோடியே 91 லட்சத்துக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒன்பது கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைக்கு கரும்புக்குரிய நிலுவைத் தொகையை வழங்க கடனாக ரூ.83 கோடியே 98 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in