நாடாளுமன்றம் நடக்காத சமயத்தில் 25 மசோதாக்கள் நிறைவேற்றம்; ஜனநாயக விரோதச் செயல்: முத்தரசன் குற்றச்சாட்டு

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். | படம் : ஜெ.மனோகரன்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். | படம் : ஜெ.மனோகரன்.
Updated on
1 min read

நாடாளுமன்றம் நடைபெறாதபோது 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது ஜனநாயக விரோதச் செயல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டினார்.

கோவை புரூக்பீல்டு சாலையில் உள்ள ஜீவா இல்லத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று மாலை (ஆக.19) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தற்போது நாடாளுமன்றம் செயல்படுகிற முறை மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் அவமதிக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். நாடாளுமன்றத்தின் ஜனநாயக நெறிமுறைகள் தற்போது மீறப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனக்குள்ள எண்ணிக்கை பலத்தை வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், பொதுப்பணித் துறைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது.

மக்கள் நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் நடைபெறாத நிலையில் எப்படி 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன ? எனவே, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அவமதிக்கப்படுவதைக் கண்டித்தும், மக்கள் ஏமாற்றப்பட்டதைக் கண்டித்தும் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை, தமிழகத்தில் 5 ஆயிரம் இடங்களில் மக்களைச் சந்தித்து மக்கள் நாடாளுமன்ற இயக்கத்தை நடத்த உள்ளோம். வேளாண் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றுவதன் மூலம், தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு விலை நிர்ணயம் செய்வதை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும்போது, அதுகுறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் வழங்கவில்லை. இதனால் அவையில் ஏற்பட்ட சர்ச்சை, ஏற்புடையது அல்ல என்றாலும் எதிர்க்கட்சிகளுக்கு விவாதம் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் குழப்பம் இருக்கும்போது 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது நியாயமற்றது. அது ஜனநாயக விரோதச் செயல் . மேலும், கோடநாடு விவகாரம் தொடர்பாக, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆவேசப்படுவது நியாயமற்றது''.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in