Published : 19 Aug 2021 06:37 PM
Last Updated : 19 Aug 2021 06:37 PM

யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி

கோவில்பட்டி

மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை கருணாநிதி வழியில் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

விளாத்திக்குளத்தில் கனிமொழி எம்.பி. இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தேர்தல் வாக்குறுதிகளை யார் நிறைவேற்றாமல் இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து மக்களைத் தொடர்ந்து ஏமாற்றியதால்தான், மக்கள் இன்று அவர்களுக்குச் சரியான பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளனர். எந்தத் தேர்தல் வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றியதே கிடையாது.

ஆனால், கருணாநிதி எப்படி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்தாரோ, அதே வழியில் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அன்றே தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்கி இன்றுவரை அதைச் செய்து கொண்டுள்ளார். ஒரே நாளில் அனைத்து வாக்குறுதிகளையும் யாராலும் நிறைவேற்ற முடியாது.

பட்ஜெட் முன்பு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை மூலம், தமிழகத்தின் நிதி நிலையை எந்த அளவுக்கு மோசமாக விட்டுவிட்டுச் சென்றுள்ளனர் என்று தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. நிச்சயமாக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். ஆனால், இதைப் பொறுக்காமல், காழ்ப்புணர்ச்சியால், அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக அதிமுகவினர் விமர்சனம் செய்து கொண்டுள்ளனர்.

கோடநாடு விவகாரம், அவர்களது ஆட்சிக் காலத்திலேயே வெளியே வந்தது. அப்போது ஒரு பத்திரிகையாளர்தான் அங்கு நடந்த உண்மைகளை வெளியே கொண்டுவந்தார். எனவே, யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஒரு பெரிய கொலை வழக்கு, அதில் உள்ள சிக்கல்கள் பத்திரிகையாளர்களால் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன. அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. யாராக இருந்தாலும் நியாயம் கிடைக்க வேண்டும். அதுதான் அரசின் கடமை. அவர்களுக்கு மடியில் கனம் இருந்தால் பயம் இருக்கலாம்.

சட்டப்பேரவையில் இவர்களது ஆட்சிக் காலத்தில் பேசுவதற்கு யாருக்கு வாய்ப்பிருந்திருக்கிறது. இதற்கு முன்னால் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் என்பது கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் எதிர்க் கட்சிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது. அவர்களால் பேச முடியாமல் வெளியே செல்கிறார்கள் என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.''

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x