

தமிழக காங்கிரஸில் இனி கோஷ்டிகளுக்கு கோட்டா இல்லை என்று கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பரவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு சென்னை திரும்பியுள்ள இளங்கோவன், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு, கடந்த 24, 25 தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. காங்கிரஸில் இனி கோஷ்டிகள் வாரியாக தொகுதிகள் ஒதுக்கும் கோட்டா முறை இருக்காது. இந்தத் தேர்தலில் இதற்கு ஒரு முடிவு கட்டப்படும். விருப்ப மனு அளிக்காதவர்கள், நேர்காணலில் பங்கேற்காதவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தேர்தலில் போட்டி யிட கண்டிப்பாக வாய்ப்பு கிடைக் காது. கட்சிதான் முக்கியமே தவிர, தனி நபர்கள் முக்கியமல்ல.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருகை தரவுள்ளார். அப்போது திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமை பெறக்கூடாது என்பதற்காக பாஜகவுக்கு அதிமுக நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், இதை எல்லாம் மீறி எங்கள் கூட் டணி மேலும் வலிமை பெறும். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது உறுதி. அதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். இவ்வாறு இளங் கோவன் கூறினார்.