Last Updated : 19 Aug, 2021 05:22 PM

 

Published : 19 Aug 2021 05:22 PM
Last Updated : 19 Aug 2021 05:22 PM

கட்டாய ஹெல்மெட், டிக்டாக், ஆன்லைன் ரம்மிக்குத் தடை: அதிரடித் தீர்ப்பு வழங்கிய 'மக்கள் நீதிபதி' கிருபாகரன் ஓய்வு

மதுரை

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டுகளைத் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என்பதுவரை 12 ஆண்டுகால நீதிபதி பணியில் பல்வேறு அதிரடித் தீர்ப்புகளை வழங்கிய 'மக்கள் நீதிபதி' என்.கிருபாகரன் நாளையுடன் (ஆக.20) ஓய்வு பெறுகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன். இவர் 2009 மார்ச் 31-ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2011 மார்ச் 29 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நாளை ஓய்வு பெறுகிறார். நாளை மொஹரம் விடுமுறை என்பதால், அவருக்குச் சென்னையில் இன்று வழக்கறிஞர்கள் பிரிவு உபசார விழா நடத்தினர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த வாரம் வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து பிரிவு உபசார விழா நடத்தின.

நீதிபதி கிருபாகரன் தனது 12 ஆண்டு நீதிபதி பணிக்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு அமர்வுகளுக்குத் தலைமை வகித்துள்ளார்.

கட்டாய ஹெல்மெட்

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என 2015-ல் தீர்ப்பளித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர்களே போராட்டம் நடத்தினர். இருப்பினும் தனது உத்தரவில் நீதிபதி என்.கிருபாகரன் உறுதியாக இருந்தார்.

வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தைக் காப்பாற்றும் நோக்கத்தில், பக்கத்து மாநிலங்களில் பெயரளவில் மட்டும் செயல்படும் சட்டக் கல்லூரிகளில் பணம் கொடுத்துப் பட்டம் பெற்று வழக்கறிஞர்கள் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் ஜெ.தீபா, ஜெ.தீபக் எனத் தீர்ப்பளித்தவர் இவர்தான். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், அவர் மனைவி நளினி ஆகியோர் இலங்கை மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் உறவினர்களுடன் போனில் பேசுவதற்கு அனுமதி வழங்கினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அவசரச் சட்டம் மற்றும் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு திருத்தச் சட்டம் ஆகிய இரண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக மாதக்கணக்கில் காத்திருந்தன. அப்போது, அது தொடர்பான வழக்குகளில் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த அடுத்தடுத்த உத்தரவுகளால் அவசரச் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணம் செலுத்த முடிவெடுக்கவும் இவரது உத்தரவுதான் காரணமாக இருந்தது.

அகழாய்வு

டிக்டாக், ஆன்லைன் ரம்மிக்குத் தடை விதித்தது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சலுகையை, பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கே வழங்க வேண்டும், ஆதிச்சநல்லூர், சிவகளை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளவும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும், கொடைக்கானல் விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும் எனப் பல்வேறு வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழ்க் கல்வெட்டு

நீதிபதி பணியின் கடைசி நாளான இன்று (ஆக.19) மைசூருவில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் ஆவணங்கள் மற்றும் கல்வெட்டுகளைச் சென்னைக்கு மாற்ற வேண்டும். சென்னையில் உள்ள மத்திய கல்வெட்டியல் பிரிவுக்கு, தமிழ் கல்வெட்டியல் பிரிவு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் நடத்திய நீதிபதி என்.கிருபாகரன் பிரிவு உபசார விழாவில் நீதிபதி பாரதிதாசன் பேசினார்.

தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அரசு இந்தி மொழியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்த வழக்கில், எம்.பி.க்கள் எந்த மொழியில் கடிதம் அனுப்புகிறார்களோ, அந்த மொழியில்தான் மத்திய அரசு கடிதம் அனுப்ப வேண்டும் என்ற அதிரடி உத்தரவையும் பிறப்பித்தார் நீதிபதி என்.கிருபாகரன்.

சமூகப் பிரச்சினை சார்ந்த வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகள், விசாரணையின்போது தெரிவிக்கும் கருத்துகளால் மக்கள் மத்தியில் புகழ்பெற்று, 'மக்கள் நீதிபதி' என்று அன்புடன் அழைக்கப்படும் நீதிபதி என்.கிருபாகரன், நாளை (ஆக.20) ஓய்வு பெறுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x