

தமிழகத்தில் வரலட்சுமி பூஜை, கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மதுரை மல்லிகை விலை கிலோ ரூ.2,000க்கு விற்பனையானது. கரோனாவுக்குப் பிறகு மதுரை மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆக. 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அங்கு விழா களைகட்டத் தொடங்கி இருக்கிறது. ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக அத்தப்பூ கோலம் போடப்படுவது வழக்கம். இதற்காக ஓசூர், மதுரை, திண்டுக்கல் நிலக்கோட்டை, கோவை, தோவாளை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய மலர்ச் சந்தைகளில் இருந்து அதிக அளவில் பூக்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன், நாளை வரலட்சுமி பூஜை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும், ஆவணியில் முக்கிய முகூர்த்த நாட்களும் தொடங்கிவிட்டதால் அனைத்து வகைப் பூக்கள் விலையும் உயர்ந்துவிட்டது.
கரோனா தொற்று வந்தபிறகு பூக்கள் பயன்பாடு குறைந்ததால் மலர்ச் சந்தைகளில் பூக்கள் வியாபாரம் குறைந்தது. போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளும் பூக்கள் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏற்கெனவே இருந்த பூந்தோட்டங்களை அழித்து மாற்று விவசாயத்தில் இறங்கினர்.
குறிப்பாக மதுரையில், ஆண்டு முழுவதும் வரவேற்பு பெறக்கூடிய பெரும்பாலான மல்லிகைத் தோட்டங்களை விவசாயிகள் அழித்தனர். அதனால், தற்போது மலர்ச் சந்தைகளுக்கு மல்லிகைப்பூ வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. மல்லிகை மட்டுமில்லாது மற்ற பூக்கள் வரத்தும் முன்புபோல் சந்தைகளில் இல்லை.
இந்நிலையில் ஓணம் பண்டிகையுடன் வரலட்சுமி பண்டிகையும், முகூர்த்த நாட்களும் தொடங்கிவிட்டதால், இன்று மதுரை மாட்டுத்தாவணி மலர்ச் சந்தை நீண்டகாலத்திற்குப் பிறகு களைகட்ட ஆரம்பித்தது. உள்ளூர் மக்கள் பூக்கள் வாங்கத் திரண்டனர். அதுபோல், கேரளா மற்றும் உள்ளூர் வியாபாரிகள், ஓணம் பண்டிகைக்குத் தேவையான பூக்களை வாங்கத் திரண்டனர். அதனால், பூக்களின் விலை வழக்கத்தை விட அதிகரித்தது.
நேற்று கிலோ 500-க்கு விற்ற மதுரை மல்லிகைப்பூ இன்று ஒரே நாளில் கிலோ ரூ.2000 ஆக விலை உயர்ந்தது. அதுபோல், கனகாரம்பரம் கிலோ ரூ.700, சம்பங்கி ரூ.400, முல்லைப்பூ ரூ.800, பிச்சிப்பூ ரூ.700, செவ்வந்தி 150, பட்டன் ரோஸ் ரூ.220, தாழம்பூ ஒன்று ரூ.650 என மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் கூறுகையில், ‘‘கரோனா ஊரடங்கிற்குப் பிறகு தற்போதுதான் சந்தை களைகட்டியுள்ளது. நேற்று கிலோ ரூ.500 விற்ற மதுரை மல்லிகை, இன்று காலை ரூ.1500, மதியம் ரூ.2,000-க்கு விற்றது. தொடர்ந்து இன்னும் விலை கூடும். அனைத்துப் பூக்களின் விலை உயர்வுக்கு ஓணம் பண்டிகை முக்கியக் காரணம். அதனுடன் வரலட்சுமி பூஜையும், முகூர்த்த நாட்களும் சேர்ந்துவிட்டதால் விலை ஒரே நாளில் உயர்ந்துவிட்டது ’’ என்று தெரிவித்தார்.