

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற சினிமா வசனத்தை நம்பி திமுக இருக்கிறது என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளாருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மாற்றம் - முன்னேற்றம் இசை முழக்கம் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட பிரச்சாரப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா இன்று சென்னை பாமக அலுவலகத்தில் நடந்தது.
இந்த குறுந்தகட்டை அன்புமணி வெளியிட்ட பிறகு, அன்புமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''வரும் 27-ம் தேதி வண்டலூரில் பாமகவின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கு பிறகு வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். நாங்கள் நாகரீகமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.
திமுக அதிமுகவை குறைகூறி பத்திரிகைகளில் விளம்பரங்களை கொடுக்கின்றனர். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற சினிமா வசனத்தை நம்பி திமுக இருக்கிறது.
இவர்களுக்கு மாற்று பாமக தான். எங்களுடைய பலம் இளைஞர்கள்'' என்று கூறியுள்ளார்.