கே.பி.பூங்கா குடியிருப்பு: ஆளும் அரசுகளின் நிர்வாகச் சீர்கேடுகளை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன: சீமான் கண்டனம்

சீமான்: கோப்புப்படம்
சீமான்: கோப்புப்படம்
Updated on
1 min read

அரசு அடுக்குமாடிக் குடியிருப்பு தரமற்று இருப்பதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சீமான் இன்று (ஆக. 19) வெளியிட்ட அறிக்கை:

"சென்னை மாநகரப் பூர்வகுடிகளுக்கு மாற்றுக் குடியிருப்பாக புளியந்தோப்பு பகுதியில் வழங்கப்பட்ட கே.பி.பார்க் அடுக்ககத்தின் கட்டுமானம் மிக மோசமான நிலையிலிருக்கும் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். அக்கட்டிடம் மிக பலவீனமாக இருப்பதும், கான்கிரீட் காரைகள் தொட்டாலே உதிர்ந்து விழுவதுமான காட்சிகள் ஆளும் அரசுகளின் நிர்வாகச் சீர்கேடுகளை அப்பட்டமாக வெளிக்காட்டுகின்றன.

ஒரு வீட்டுக்கு ரூ.15 லட்சம் வீதமென செலவினத்தை மதிப்பிட்டுவிட்டு, தரமற்ற வீட்டைக்கட்டி முறைகேடு செய்திட்ட முந்தைய அதிமுக அரசின் மோசடித்தனத்தையும், கட்டிடத்தின் தரத்தைக் கூடப் பரிசோதிக்காமல் மக்களை அவசர கதியில் குடியேற்றிய திமுக அரசின் அலட்சியப் போக்கையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

குடிசையில் இருந்தாலாவது எங்கள் மக்கள் உயிரோடு இருப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு என்று அழைத்துச் சென்று, அதுவும் இல்லாமல் செய்துவிடாதீர்கள் பெருமக்களே! 2016ஆம் ஆண்டு நடந்த முகலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு விபத்தும், அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளும் நமக்குப் பெரும் படிப்பினையாக இருக்கிறது. மீண்டும் அதுபோல ஒரு கோர விபத்து நிகழ்ந்துவிடக் கூடாது.

ஆகவே, உடனடியாக மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும், அடுக்ககத்தைத் தரமற்றதாகக் கட்டி மக்கள் உயிரோடு விளையாடும் கொடுஞ்செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதும், முந்தைய ஆட்சியாளர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்".

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in