

அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனரா என்பது குறித்து, சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயானிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது, நேற்று (ஆக. 18) பேரவையில் எதிரொலித்தது.
இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை மறு விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், அதிமுகவினர் 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல நடந்து கொள்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர், அவையிலிருந்து வெளிநடப்பு செய்து, பேரவை வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கோடநாடு வழக்கில் தன்னையும் சேர்க்க சதி நடப்பதாக, ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். மேலும், நேற்றும் இன்றும் (ஆக. 19) சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்தது.
இந்நிலையில், அதிமுகவினரை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றியதாக, சில ஊடகங்களில் செய்தி வெளியானதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சட்டப்பேரவையில் பேசினார்.
இதற்கு விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, "ஜனநாயக முறையில் சட்டப்பேரவையை நடத்த வேண்டும் என்ற கொள்கை உடையவர் முதல்வர். மக்களின் பிரச்சினைகளை பேச வேண்டிய அவையில் தனிப்பட்ட பிரச்சினைகளை பேசக்கூடாது. இருந்தாலும் பேச அனுமதித்தேன். ஆனால், என் அனுமதி இல்லாமல் அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி கூச்சலிட்டனர்.
பின்னர் அவர்களாகவே வெளிநடப்பு செய்து, வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்றனர். எனவே தான், அங்குள்ளவர்களை அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றுமாறு தெரிவித்தேன். நேற்றைய சம்பவத்தில் அதிமுகவினர் கூச்சல், குழப்பத்தை அவையில் ஏற்படுத்திவிட்டு, அவர்களாகவே வெளிநடப்பு செய்தனர்" என தெரிவித்தார்.