

காற்றாலை மற்றும் சூரிய மின்னுற் பத்தி உள்ளிட்ட மரபுசாரா மின்னுற் பத்தியில் தமிழகம் மீண்டும் முதலிடத் துக்கு முன்னேறும் வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன.
மரபுசாரா மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் காற்றாலை மின் உற்பத்தியை
விட சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் பல அமைக்கப்பட்டன. இதன்விளைவாக சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத மரபுசாரா மின்னுற்பத்தியில் கர்நாடக மாநிலம் 2018-ல் முதலிடத்துக்கு முன்னேறியது.
இருப்பினும் ஒட்டுமொத்த மின்னுற்பத்தியில் கர்நாடகாவுக்கு இணையாக தமிழகம் திகழ்ந்தது. 2019-ம் ஆண்டு இரு மாநிலங்களிடையிலான மின்னுற்பத்தி வித்தியாச அளவு 900 மெகா வாட்டாக இருந்தது. இது கடந்த பிப்ரவரி மாதம் 450 மெகா வாட்டாக குறைந்துள்ளது.
ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி கர்நாடகாவின் மொத்த மரபுசாரா மின்னுற்பத்தி 15,573 மெகாவாட்டாக உள்ளது. தமிழகத்தின் மின்னுற்பத்தி 15,458 மெகாவாட்டாக உள்ளது என மத்திய மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் (எம்என்ஆர்இ) வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின்னுற்பத்தி திட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இவை உற்பத்தியைத் தொடங்கும்போது மரபுசாரா மின்னுற்பத்தியில் தமிழகம் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும்.
தமிழகத்தில் சூரிய ஆற்றல் மூலமான மின்னுற்பத்தி 4,594 மெகாவாட்டாகும். இது முன்பு 2,575 மெகா வாட்டாக இருந்தது. அதேசமயம் காற்றாலை மின்னுற்பத்தி 8,969-லிருந்து 9,717 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்த சூரிய ஆற்றல் மின்னுற்பத்தி 7,452 மெகா வாட்டாகும். இது முன்பு 6,096 மெகா வாட்டாக இருந்தது. இதேபோல காற்றாலை மின்னுற்பத்தி 4,695-லிருந்து4,939 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கையின் மூலம்உற்பத்தியை அதிகரிக்க கர்நாடகஅரசு திட்டமிட்டுள்ளது.
சூரிய ஆற்றல் மின்னுற்பத்தியில் கர்நாடகா முதன்மை வகிக்கிறது. அதேசமயம் தமிழகம் காற்றாலை மின்னுற்பத்தியில் முதலிடத்தில் விளங்குகிறது. சூரிய மின்னுற்பத்தியில் தமிழகம் நான்காமிடத்தில் உள்ளது. கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் 2-வது மற்றும் 3-ம் இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஒட்டுமொத்த மரபுசாரா மின்னுற்பத்தி 100 கிகாவாட்டாக உள்ள நிலையில் தமிழகத்தின் பங்கு 7.38 கிகா வாட்டாக உள்ளது. நிலக்கரி அனல் மின் நிலையங்கள் தற்போது இங்கு உருவாகி வருகின்றன.
மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில் தமிழ்நாடு சர்வ தேச அளவில் முக்கியத்துவம் பெறுவதற்கு இது மிகவும் உரிய தருணம். தற்போது உலகமே பசுமை எரிசக்தி உற்பத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதற்குரிய கொள்கைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று ஆரோவில் கன்சல்டிங் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்ட்டின் ஷெர்ப்ளெர் கூறியுள்ளார்.