Published : 19 Aug 2021 03:11 AM
Last Updated : 19 Aug 2021 03:11 AM

புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மாணவி தயாரித்துள்ள கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தை பரிசீலிக்கலாம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

எல்.கவுரி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கழியராயன்விடுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் கவுரி(16). இவர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவர், அரசின் திட்டங்களை பெறுவதற்கும், மனுக்களை அளிப்பதற்கும் பிற அலுவலகங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்ப்பதற்காக கிராம அளவில் வலுவான புள்ளிவிவரங்களுடன்கூடிய கட்டமைப்பை உருவாக்குவது குறித்து கிராமப்புற மேம்பாட்டு திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பினார்.

இதை, எந்த அரசும் ஏற்காததால், இதை செயல்படுத்துவதற்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து கடந்த மாதம் 12-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில், மாணவியின் செயல் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலிக்கலாம் என நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மாணவி கவுரி கூறியதாவது: மக்கள் தங்களது தேவைகளுக்காக பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று வீண் அலைச்சலை தவிர்ப்பதற்காக ஒரு செயல் திட்டத்தை உருவாக்கினேன். அதில், ஒவ்வொரு கிராமத்திலும் வசிக்கும் மக்கள், சாகுபடி, நீர்நிலைகள் உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களுடன் கிராம ஆட்சியர் பணியிடம் உருவாக்க வேண்டும். இவர் மூலமாகவே அரசை தொடர்புகொள்ளச் செய்தால் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படும். அரசுக்கும், மக்களுக்கும் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுவது குறித்தும் இந்த ஆய்வுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

ஏழை, பணக்காரர் என்பதற்கான முழு புள்ளிவிவரம் இல்லாமல்எந்த செயல் திட்டமும் உரியவர்களிடம் சென்றடையாது என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளதால், இந்த திட்டத்தை அரசு பரிசீலிக்கும் என நம்புகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x