

வானூர் அருகே செம்மண் நிலப்பரப்பில் மீண்டும் கூழாங்கற்கள்தோண்டி எடுத்து வெளிமாவட் டங்களுக்கு கடத்தப்படுகிறது.
வானூரையொட்டிய பகுதிமுழு தும் பல ஏக்கர் பரப்பளவில் செம் மண் நிலப்பகுதியாக உள்ளது. இங்கு மானாவாரியாக முந்திரி பயிரிடப்படுகிறது.
இந்த நிலப்பரப்பில் விவசாயம் செய்ய முடியாது என்று நினைத்த விவசாயிகள், நிலங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
நிலத்தை வாங்கியவர்கள் மண்ணில் கூழாங்கற்கள் வளம் உள்ளதை அறிந்து அதனைஎவ்வித அனுமதியும் பெறாமல்தோண்டி எடுத்து வெளிமாவட் டங்கள், வெளிமாநிலங்களுக்கு கடத்தி வருகின்றனர். இதனால் விரைவில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வானூர் அருகேராயபுதுப்பாக்கம் கிராமத்திலிருந்து மாத்தூர் செல்லும் குறுக்குப் பாதையில் செல்லும் காட்டுமேடு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பல இடங்களில் 10 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி கூழாங்கற்களை எடுக்கின்றனர். இந்த தகவல் ஊடகங்களுக்கு தெரியவந்தவுடன் வானூர் வரு வாய்த் துறையினர் உடனடியாக அப்பகுதியில் உள்ள குவாரிகளை மூடினர்.
இதற்கிடையே பெரம்பை, பங்களாமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக மீண்டும் கூழாங்கற்கள் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் கடத்தப்படுகின்றன என்று செய்தி வெளியானது.
இதுகுறித்து வானூர் வட்டாட்சியர் சங்கரலிங்கத்திடம் கேட்ட போது, "ராயபுதுப்பாக்கம் பகுதியில் கூழாங்கற்களை கடத்துப வர்களை எச்சரித்துள்ளோம். இனிஇவை தொடர்ந்தால் காவல்துறை யில் புகார் அளிக்கப்படும்"என்றார்.
இதனைத் தொடர்ந்து கனிம வளத்துறையினரிடம் கேட்டபோது, "கோட்டக்குப்பம், ஆரோவில், வானூர் காவல் நிலையங்களில் இக்கொள்ளை தொடர்பாக 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் உள்ளன. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு தேவையான ஊழியர் கள் பற்றாக்குறை உள்ளதால் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்க முடியவில்லை. விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும்" என்றனர்.
பணியாற்ற போட்டி
வானூர் வட்டத்தில் வருவாய்த்துறையில் பணியாற்ற பெரும்பா லோனோர் போட்டி போடுகின்றனர். இதில் பண பலம், அரசியல் பலம் உள்ளவர்கள் இங்கு பணிமாறுதல் செய்யப்படுகின்றனர். இங்குதான் முறைகேடாக செயல்படும் அதிகஅளவு கல்குவாரிகள், கனிம வளக்கொள்ளை போன்றவை நடைபெறுகிறது. வருவாய்த் துறையினருக்கு தெரியாமல் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. அதனாலேயே இங்கு பணியாற்ற இவ்வளவு போட்டி.
கொள்ளையடிப்பவர்கள் மீதுஎடுக்கப்படும் நடவடிக்கை இருக்கட்டும். இங்கு நடைபெறும் முறைகேடுகளையும், கனிமவள கொள்ளைகளையும் கண்டும் காணாமல் இருக்கும் வரு வாய்த் துறையினர் மீது மாவட்டநிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
இதற்கிடையே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பூங்காக்கள் வைத்து அழகுபடுத்த இப்பகுதியி லிருந்துதான் கூழாங்கற்கள் அனுப்பி வைக்கப் பட்டதாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக் கின்றனர்.