

`திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள புராதன சின்னங்களில் ஒன்றான டவுன் அலங்கார வளைவு பாழ்படுவதை தடுக்க வேண்டும். மாநகராட்சியின் சின்னமாக விளங்கும் இப்பகுதியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உயிர்ப்புடன் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
திருநெல்வேலி மாநகரின் முக்கிய அடையாளமாக இருக்கும் இந்த அலங்கார வளைவு, திருநெல்வேலி டவுனுக்குள் நுழையும் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோரின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி 1935-ம் ஆண்டு மே 6-ம் தேதி இது அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த டி.டி.வாரன் இதற்கான அடிக்கல் நாட்டியிருந்தார். அப்போதைய திருநெல்வேலி முனிசிபாலிட்டி தலைவராக மேடை தளவாய் டி.ரங்கநாத முதலியார் இருந்துள்ளார். ஆர்ச்சின் மேல்பகுதியில் பிரிட்டிஷ் பேரரசின் லட்சினை இடம்பெற்றிருக்கிறது. ஒரு பேருந்து மட்டுமே செல்லும் அளவுக்கு அகலம் கொண்டது இந்த அலங்கார வளைவு. தற்போது வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் இந்த அலங்கார வளைவு இருக்கும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சாலையும் சேதமடைந்திருக்கிறது. இதனால் தூசு மண்டலம் கிளம்புகிறது. அலங்கார வளைவு மீது அரசியல் கட்சிகள், அமைப்புகள் சுவரொட்டிகளை ஒட்டுவதும், அதை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அப்புறப்படுத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அலங்கார வளைவின் தூணுக்கு கீழே குப்பைகளை கொட்டி எரிப்பதும், அதனை மறைக்கும் வகையில் பெயர்ப் பலகை வைப்பதும் தொடர்கிறது.
கனரக வாகனங்கள் இதை கடந்து செல்லும்போது, வளைவின் மீது இடித்து பல இடங்களில் கட்டுமானம் சேதமடைந்துள்ளது. அலங்கார வளைவின் அழகையும், கம்பீரத்தையும் கெடுக்கும் வகையில் சுற்றுப்புற பகுதிகள் பராமரிப்பின்றி இருக்கின்றன.
திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. மாநகராட்சியின் சின்னமாக இருக்கும் டவுன் அலங்கார வளைவு பகுதியை ஜொலிக்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கிறார்கள்.